Published : 14 Dec 2016 09:52 AM
Last Updated : 14 Dec 2016 09:52 AM

இப்படிக்கு இவர்கள்: பணமில்லாப் பரிமாற்றம் சாத்தியமில்லை!

கடையடைப்பு தேவையில்லை!

முதல்வர் மரணமடைந்தார் என்று தவறுதலாகச் சொல்லப்பட்ட டிச.5-ம் தேதி மாலை 5 மணிக்கே அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. ஒரு தேநீர்க் கடை கூட இல்லை. குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு ஓரளவு பிரச்சினைகள் குறைவு. அதிலும், வெளி மாவட்டங்களில் தங்கிப் பணிபுரிபவர்கள் நிலைமைதான் துயர்மிகுந்தது. நோயாளிகளுக்கு மருந்து - மாத்திரைகள் வாங்க வேண்டிய அவசியம் வரும்போது, அவர்களால் என்ன செய்ய முடியும்? எனக்கே சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை விழுங்க வேண்டிய கட்டாயமான நிலை என்பதால், கடை கடையாக அலைந்தேன். எங்கும் கிடைக்கவில்லை.

கடைசியில், நோய் உபாதையுடனேயே அன்றும் மறுநாளையும் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அன்று தமிழகம் முழுவதும் என்னைப் போல் எத்தனை லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? மக்களால் உருவாக்கப்பட்ட மக்களுக்கான அரசுகள் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? எதிர் அணியில் உள்ளவர்கள் ஏதேனும் பந்த் நடத்தினால், அதிகாரத்தில் உள்ளவர்கள் காவல் துறையைப் பாதுகாப்புக்கு அனுப்பி, “நீங்கள் கடை அடைக்க வேண்டாம். திறந்து வணிகம் செய்யுங்கள்.. நாங்கள் பாதுகாப்பு தருகிறோம்” என்று சொல்லும் அரசு, இப்படி அத்தியாவசியமான கடைகளைக்கூட மூடிவிட்டுத்தான் தலைவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமா? அப்படி கட்டாயமாக மூட வேண்டும் என்று விரும்பினால், எல்லாக் கடைகளையும் மூடிவிட்டு, தெருவுக்கு ஒரு கடையாவது பாதுகாப்புடன் திறக்க ஏற்பாடு செய்யலாமே!

- உஸ்மான், மின்னஞ்சல் வழியாக.

திமுக, அதிமுகவின் நிலை

டிசம்பர் 11 நாளிதழில், ‘தமிழ் நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது என்ன?’ கட்டுரை படித்தேன். தமிழக அரசியலில் பெருமளவு, இரு தலைவர்களின் துருவ அரசியலாகக் கடந்த கால் நூற்றாண்டுகள் நிலைபெற்றி ருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மைதான். அண்ணா, தன் தம்பிமார்களைத் தட்டிக்கொடுத்து வளர்த்தார். அந்தத் தட்டலில் ஒரு செல்லம் இருந்தது. யாரும் தன்னை விஞ்சிவிடுவார்களோ என்ற பயமோ தடுமாற்றமோ அவருக்கில்லை. அவரின் மறைவுக்குப் பின்பு கருணாநிதி தலைவரானதுகூட அண்ணா விட்டுச்சென்ற பெருந்தன்மையால்தான். ஆனால், எம்ஜிஆர் பிரியவும், வைகோ வெளியேற்றப்படவும் காரணம், அண்ணாவின் பெருந்தன்மை கருணாநிதியிடம் இல்லாததே.

எம்ஜிஆர் இருந்தபோது, அதிமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்குமிக்க தளபதிகள் இருந்தார்கள். ஆனால், அதிமுகவிலோ நிலைமை தலைகீழ். யாரும் நம்பர் டூ கிடையாது. தன் இறுதிக்காலம் வரை நம்பர் ஒன் முதல் நம்பர் கோடி வரை ஜெயலலி தாதான் அந்தப் பொறுப்பில் இருந் தார். அவர் காலத்தில் எந்த மாவட்டச் செயலாளரும் நிரந்தரம் கிடையாது. இப்போது இரு கட்சிகளுமே குடும்பச் சொத்துபோல் மாறிவிட்டது!

- மு.சுப்பையா, தூத்துக்குடி.

பணமில்லாப் பரிமாற்றம் சாத்தியமில்லை!

காசில்லா வணிகத்துக்கு இட்டுச் செல்ல பகீரத முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவது, சாதாரண மக்களிடமிருந்து ஆள்வோர் எவ்வளவு விலகியுள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது. நான் ஒரு சிற்றூரில் தலைமையாசிரியராகப் பணியாற்றியபோது, பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காகப் பொதுமக்களிடம் நன்கொடை பெற முற்பட்டேன். ஒரு பெரியவரைச் சந்தித்து, வெகுநேரம் பேசியும் அவர் பிடிகொடுக்கவில்லை. கேட்டுக்கொண்டிருந்த அவரது 80 வயது மனைவி, “உங்களால் கொடுக்க முடியாது என்றால், நான் கொடுக்கிறேன்” என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று ஒரு கத்தை கரன்சிகளை என் முன் வைத்ததுடன், “எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். அவை எல்லாம் வீட்டு நெற்குவியலில் மறைத்துவைக்கப்பட்ட சிறுவாட்டுப் பணம்.

இன்றும் பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் தங்கள் சேமிப்புகளை அவசரத்துக்கு உதவும் வண்ணம் வீட்டிலேயே வைத்திருப்பார்கள். பணமில்லாப் பரிமாற்றத்தில் இவை எல்லாம் சாத்தியமேயில்லை.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x