Published : 20 Dec 2016 10:03 AM
Last Updated : 20 Dec 2016 10:03 AM
சாகித்ய அகாடமி விருதுக்கு என் தேர்வாக ஐந்து எழுத்தாளர்கள் பெயர்களை ‘தி இந்து’விலிருந்து கேட்டார்கள். தொடர்பு வசதியின்மையால் என் தேர்வுகளை நேரத்துக்கு அனுப்ப முடியவில்லை. என் தேர்வு இங்கே. ஐவர் மட்டுமே என்பதால் முன்னோடிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம், விரும்பும் இன்னும் சிலரைச் சேர்க்க முடியவில்லை. ஐவரும் நேர்க்கோட்டில். தகுதி வரிசையில் வைத்து வாசிக்க வேண்டாம்.
# இமையம்: செடல், பெத்தவன் நூல்களிலிருந்து நறுமணம் வரை. பேராசிரியர்களின் ஆய்வாளர்களின் உலகம், சாதியக் கொலைகள் தொடங்கி புதிய கதைப் பொருட்களுக்கு)
# பிரம்மராஜன்: செறிவான நவீன கவிதை எழுத்துக்கு, பல புதிய திசைகளைக் கவிதையில் அறிமுகப்படுத்தியதற்கு.
# அம்பை: எழுத்தில் பெண் உலகை என்பதாக மட்டுமல்லாமல் ‘பொது’ உலகில் பெண் இருப்பைக் கவனப்படுத்தியதற்கு.
# கோணங்கி: பரிசோதனை புனைவெழுத்துக்கு, புதிய சொற்கள், சொற்கூட்டங்களின் அறிமுகத்துக்கு.
# சாரு நிவேதிதா: வித்தியாசமான, நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கதைப் பொருள்களுக்கு, எழுத்துச் ‘சம்பிரதாயங்களிலிருந்து’ நழுவிச் செல்லும் பாணிக்கு.
- பெருந்தேவி, மின்னஞ்சல் வழியாக..
போராட்டத்தின் தேவை
பணமதிப்பு நீக்க விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் கோரும் எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால், குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதுமே முடங்கியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முதன்மையான சட்ட விவாதங்கள், நிறைவேற்றங்கள் நடக்கும்போதே மிகக் குறைவான எண்ணிக்கையினராக உள்ள உறுப்பினர்களே பங்கேற்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்துக்குள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டும் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது மட்டுமே, ஆளும் கட்சியைப் பணிய வைக்கும் நடவடிக்கையாக இருக்க முடியாது.
மக்களாட்சி அமைப்பில் இது மட்டுமே போராட்ட முறையுமல்ல. ஒவ்வொரு கட்சியும் மக்களைத் திரட்டி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்த வேண்டும். போராட்ட விழிப்புணர்வுள்ள மக்கள் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே மக்கள் விரோத எதேச்சாதிகாரங்கள் தலையெடுப்பதைத் தடுக்க முடியும்.
- சு.மூர்த்தி, மக்களாட்சிக்கான கல்வி இயக்கம், மின்னஞ்சல் வழியாக...
மொழி வளர்த்த வரலாறு
‘… என்றாலும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் மொழியின் அலங்காரத்தைக் காப்பாற்றிவருகிறார்கள்’ - இந்த வரியில் இருந்து, ‘மொழியைத் துரு ஏறச் செய்யும் பொன்னாடை’(5.06.2016) என்ற அரவிந்தனின் கட்டுரை குறித்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். காரணம், அந்த வரியின் மீது இருக்கும் வரலாறு. அப்போதெல்லாம் படிக்காத பாமர மக்களை ஈர்த்த ஒரே இடம், மாலையில் கூடி இரவு முடியும் முன் முடியும் திராவிட இயக்கக் கூட்டங்கள்தான். அடுக்கு மொழி வசனங்களால் அனல் பறக்கும் கூட்டங்களைக் காணக் கூட்டம் கூட்டமாகப் பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் வருவார்கள்.
அப்படித்தான் திராவிட இயக்கங்கள் தன்னையும் மொழியையும் நிலைநிறுத்திக்கொள்ள வழி அமைத்துக்கொடுத்தன. அந்த மொழியாற்றலை இன்றளவும் திராவிட இயக்கங்களில் பார்க்க முடிகிறது. மேடையை நோக்கிய ஈர்ப்பை அவர்களால் எளிமையாகச் செய்ய முடிகிறது. காரணம், அடுக்கு மொழி வசனங்கள். தெளிவான தொனி. அழுத்தமான உச்சரிப்பு. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ். தங்கள் கொள்கைகள் மீதான ஈடுபாட்டுக்கு இணையாகத் தமிழின் மீதும் அவர்களால் ஆர்வம் காட்ட முடிந்தது. எல்லாவற்றையும் விட, மொழி வளர மக்களின் பங்கை விட அரசின் பங்குதான் மிக முக்கியத் தேவை.
- எம்.கணேஷ், மின்னஞ்சல் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT