Published : 19 Dec 2016 02:27 PM
Last Updated : 19 Dec 2016 02:27 PM
பணம் புரளும் இடம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய ‘தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது என்ன?’ என்ற கட்டுரையையும், சசிகலா பற்றிய ‘சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா?’ என்ற சமஸின் இரு கட்டுரைகளையும் சேர்த்து வாசித்தால், கூடுதல் பொருள் புரிபடுகிறது. சசிகலா கட்டுரையின் இறுதி வரிகள் குறிப்பிடுவதுபோல, ‘இன்றைய அரசியல், கோடி கோடியாக முதலீடுகள் நடக்கும், பணம் புரளும், பணம் பகிரப்படும் இடம்’ என்ற காரணமே, அதிமுகவுக்குள் என்ன நடந்தாலும் அதைக் கட்டுக் குலையாமல் வைத்திருக்கிறது.
மீதம் இருக்கும் நாலரை ஆண்டுகளும் அதன்வழியே கண்ணில் தெரியும் லாபமும், அதிகார சுகமுமே ஒற்றுமையோடு ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல உத்வேகம் ஊட்டுகிறது. எத்தகைய ஜனநாயகச் சீர்கேடுகளைச் செய்யவும், துணைபோகவும், சகித்துக்கொள்ளவும் வைக்கிறது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை ஏகமனதாக சசிகலாவைத் தலைமை ஏற்கச் சொல்வதிலும் வியப்பில்லை. அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் வரை இந்த ஒற்றுமை நிலவும். ‘ஊரு ரெண்டுபட்டால்...’ என்ற பழமொழி தெரியாதவர்கள் அல்ல அவர்கள்.
- பேரா.நா.மணி, ஈரோடு.
வங்கிகளின் மதிப்பு?
ரூபாய் மதிப்பு நீக்க நடவடிக்கை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஏடிஎம் மையங்களில் கூட்டத்துக்குப் பஞ்சமில்லை. பல நூறு ஏடிஎம் மையங்கள் திறந்தபாடில்லை. வங்கிகளில் பெரும்பாலும் அனுமதித்த அளவுக்கு எடுப்பதற்குக்கூடப் பல வங்கிகளில் பணம் இல்லை என்று சொல்லப்படுகிறது. பத்திரிகைச் செய்திகள், சென்னை ரிசர்வ் வங்கிக்கு ராணுவ விமானத்தில் 24 டன் எடைகொண்ட 500 ரூபாய் புதிய நோட்டுகள் வந்துவிட்டதாக சொல்கின்றன. அந்த ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் என்ன ஆனது, எங்கே போனது என்றே தெரியவில்லை. இனிமேலாவது, மக்களின் துயர் துடைக்க ரிசர்வ் வங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அரசியல்வாதிகளைப் போலவே வங்கிகளும் மதிப்பிழந்து நிற்கும்!
- தொ.ச.சுகுமாறன், வேலூர்.
மக்கள் மீது விசுவாசம் வையுங்கள்!
அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்பது பொய் என்பதற்கு வாழும் உதாரணம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். வெள்ளையரை எதிர்த்துப் போராடி, உள்நாட்டுத் தலைவர்களுடன் அரசியல்ரீதியாகப் போராடி, தலைவரை எதிர்த்து புதுக் கட்சி ஆரம்பித்து மக்களுக்காகப் போராடி, தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துப் போராடி, கணக்கு கேட்டு கலகம் செய்து வெளியேறிப் போராடி, தன் தலைவரின் சவ ஊர்வலத்தில் இறக்கிவிடப்பட்டு, சட்டசபையில் அவமதிக்கப்பட்டுப் போராடி... இப்படித்தான் தமிழக முதல்வர்கள் உருவானார்கள். ஆனால், எந்தப் போராட்டமும் இல்லாமல் மூன்றாவது முறையும் முதல்வருக்கான சிம்மாசனம் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம்தானே? சாந்தமானவர், எல்லோரையும் அரவணைத்துப் போகிறவர், கஷ்டப்பட்டு மேலே வந்தவர், கிராமத்து மனிதர், எளிமையானவர் - அவரிடம் நாம் கேட்பது ஒன்றுதான், இதுவரை ஜெயலலிதாவிடம் காட்டிய அதே விசுவாசத்தை இனிமேல் மக்களுக்குக் காட்டுங்கள்.
- ஜெயபாரதி பிரியா, கரடிக்குளம்.
கடவுளின் நாக்கு
மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும் ஏய்த்தும் வாழ்ந்தே பழக்கப்பட்டவர்கள். தான் மட்டுமே நலமாக வாழ வேண்டும் என்னும் சுயநலம் உடையவர்கள். அடுத்தவர்களுக்காக உதவுவது என்றாலும், அதில் ஒரு சுயநலம் மறைந்திருக்கும். மனிதர்களைக் கடவுள் படைத்ததே மற்ற மனிதர்களுக்கு உதவி செய்யவே என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ள பழங்குடிகளின் கதை, மனிதர்களுக்கு நல்ல அறிவுரை. ‘கடவுளின் நாக்கு’ தரும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
- பொன்.குமார், சேலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT