Published : 06 Dec 2016 09:41 AM
Last Updated : 06 Dec 2016 09:41 AM
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது, ‘தமிழகத்தின் மகாரத்தினம் விற்பனைக்கு’(டிச.1) கட்டுரை. சேலம் உருக்காலைத் திட்டம் நிறைவேறியதில், காங்கிரஸில் இருந்த கம்யூனிஸவாதியான மோகன் குமாரமங்கலத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. 1971-லிருந்து 1973 வரை மத்திய அரசின் இரும்பு மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அவர். சேலம் உருக்காலைக்காக பிரதமர் இந்திரா காந்தியிடம் வலியுறுத்தியதோடு , தன்னுடைய துறையிலிருந்து நிதி ஒதுக்கியவர். அவருடைய நினைவாக அங்கிருக்கும் தொழிலாளர் குடியிருப்புக்கு மோகன் நகர் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- உமா மகேஸ்வரி அமர், சென்னை.
வேலியே பயிரை மேயலாமா?
ஏற்கெனவே, தனியார் வங்கிகள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி வரும் சூழலில், அதே தவறைச் செய்து, பொதுத் துறை வங்கி அதிகாரிகள் 27 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தி (டிச.3) அதிர்ச்சியளிக்கிறது. பொதுத் துறை ஊழியர்களுக்கு அரசு நல்ல சம்பளம் வழங்குகிறது. வேலியே பயிரை மேய்கிறது என்றால், அதைத் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். இத்தகைய வங்கி அதிகாரிகளின் பெயர் மற்றும் பணியாற்றி வந்த வங்கிகளின் விவரங்களையும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்தவர்களின் பெயர் மற்றும் தொழில் விவரங்களையும் அவர்களது புகைப்படங்களோடு வெளியிட வேண்டும்.
- இளங்கோவன், மின்னஞ்சல் வழியாக.
நினைவைக் கிளறிய இலை!
டிசம்பர் 1-ம் தேதி வெளியான ‘இலை போயாச்சு’ பத்திக் கட்டுரை படித்தேன். உணவகங்களில் மட்டுமல்ல, பெரிய விருந்துகளிலும் வாழை இலையைக் கண்ணால்கூடப் பார்க்க முடிவதில்லை. பசிக்குத்தான் உணவு என்றாலும், அது ஆரோக்கியமானதாக, சுகாதாரமானதாக உள்ளதா என்பதைப் பற்றி யோசிக்க இளைய தலைமுறைக்கு நேரமில்லை. கவிராயர், இலைச் சாப்பாட்டு மகத்துவத்தை விவரிக்க விவரிக்க… அன்றைய நாள் விருந்துகள், வீட்டுச் சாப்பாடுகள் நினைவுக்குவருகின்றன. “இலை போடப்பா, இலை போட்டாச்சா” என்று கல்யாண விருந்துகளில் கேட்கும் குரல் இப்போது இல்லை. இலை, சருகு, தொன்னை என்பவை குறைந்து, எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்து நம் உடலையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதைப் பற்றி பெரிதாய் யாரும் கவலைப்படுவதில்லை. பழைய நினைவுகளைக் கிளறும் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடும் ‘தி இந்து’வுக்குப் பாராட்டுகள்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
யானைகளைக் காப்போம்
ஜேக் டோரொத்தி எழுதிய, ‘யானை எனும் அற்புத மருத்துவர்’ கட்டுரை (டிச.2) படித்தேன். தன் பலம் என்ன என்று தெரிந்தும், தன்னிலை இழக்காத ஒரு அதிசய விலங்கு யானை. உணர்வு மற்றும் அறிவுத்திறன் மேம்பட்ட விலங்கு அது. ஆனால், நம் சுயநலத்துக்காகக் குட்டியிலிருந்து பிரித்து வந்து பழக்கி, தெருக்களில் பிச்சை எடுக்கவைப்பது அபத்தம். தந்தத்தை எடுப்பதற்காகக் கொல்வது பெரும் கொடுமை. ஆசிய யானைகளைச் சுற்றி எப்போதும் ஆபத்து இருக்கிறது. யானைகளைப் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும். தெருக்களில் பிச்சை எடுக்க வைப்பதையும் தடுக்க வேண்டும்.
- ப.தாணப்பன், தச்சநல்லூர்.
மனுஷங்கடா!
ஆதிக்க வெறியர்களுக்கு எதிரான கவிஞர் இன்குலாப்பின் ஆவேசத்தைச் சுட்டிக்காட்ட டிசம்பர் -2ல் வெளியான ‘மனுசங்கடா’ பாடல் ஒன்று போதும். வேறு எந்த ஆவணமும் வேண்டாம். இவர் போன்ற திண்மையான மனம் கொண்ட எழுத்தாளர்கள் தற்காலச் சூழலில் குறைந்துகொண்டே செல்வது வருந்தத்தக்கது.
- கதிரவன் இரத்தினவேலு, மேச்சேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT