Published : 27 Dec 2016 10:23 AM
Last Updated : 27 Dec 2016 10:23 AM

இப்படிக்கு இவர்கள்: நினைவிடத்துக்கு ரூ.3,600 கோடியா?

மும்பையில், ‘சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடி செலவில் நினைவிடம். பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்’ (டிச.24) எனும் செய்தி வாசித்தேன். சிவாஜி போற்றப்பட வேண்டியவர்தான், சந்தேகம் இல்லை. அதற்காக, ரூ.3,600 கோடி செலவு செய்ய வேண்டுமா? நாடெங்கும் விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகின்றனர். ஏழைகள் நாள்தோறும் வங்கிகளின் வாசலில் நிற்கிறார்கள். பொருளாதார நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது என்பதைப் புள்ளிவிவரங்களும் இந்திய ரிசர்வ் வங்கியின் தொடர் அறிவிப்புகளும் காட்டுகின்றன.

இந்தச் செய்தி பிரசுரமாகியுள்ள அடுத்த பக்கத்திலேயே ‘ரூ.1,500 கோடிக்குக் கடன் பத்திரம் தமிழக அரசு வெளியீடு’ என்னும் செய்தியும் பிரசுரமாகியுள்ளது. கடன் பத்திரம் வெளியிடுவது என்பது பற்றாக்குறையை ஈடு செய்ய நிதி திரட்டத்தானே! தமிழ்நாட்டுடன் வேறு 12 மாநிலங்களும் கடன் பத்திரங்கள் வெளியிடுவதாகச் செய்தி தெரிவிக்கிறது. ‘தேச நலனுக்காகக் கடினமான சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன’ என்று அறிவித்துக்கொண்டே இவ்வாறு செலவிடுவது தேச நலனுக்கு உகந்த செயல் அல்ல!

- இரா.குப்புசாமி, தாராபுரம்.



இனியும் பொறுக்கலாகாது

சேகர் ரெட்டியின் வீட்டில் கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட உடனே, கைது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைப் போலவே தலைமைச் செயலாளர் மீது வெறும் வழக்குப் பதிவு என்றால், சி.பி.ஐ. அதிகாரிகளின் செயல்பாட்டில் சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு பெரிய கொள்ளைக் கூட்டமே அதிகார வட்டத்தில் இருந்துகொண்டு கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதை, இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலன் என்ற பொறுப்பில் உள்ள உச்ச நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்க்கக் கூடாது.

தேசத் துரோகம் செய்யும் இவர்களைப் போன்றவர்கள், தீவிரவாதிகளைவிட மோசமானவர்கள். தேச துரோகச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும். இல்லையென்றால், இந்த நாடு அரசியல் சாசனப்படி செயல்படுகிறதா? இல்லை எழுதப்படாத லஞ்ச ஊழல் சாம்ராஜ்யத்தில் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

- சி.பிரகாஷ், முத்தரசநல்லூர்.



குறள் வழக்கறிஞர்

டிசம்பர் 22-ம் தேதி நாளிதழில், ‘பரமபதம் வழியாகத் திருக்குறள் - விழிப்புணர்வில் கோவை வழக்கறிஞர்’ செய்தி படித்தேன். நாடு, மதம், மொழி, இனம் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூல் என்கிற சிறப்பு பெற்ற திருக்குறளையும், அதிலுள்ள கருத்துகளையும் மாணவர்களுக்குக் கொண்டுசெல்லும் பணியில் பல புதுமைகளைச் செய்து, ‘திருக்குறள் வழக்கறிஞர்’ஆகப் பவனி வரும், கோவை ராஜாஷெரிப் பாராட்டுக்குரியவர். அவரது அரும்பணியை அடையாளப்படுத்திய ‘தி இந்து’வுக்கு நன்றி!

- அ.கற்பூர பூபதி, சின்னமனூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x