Published : 05 Dec 2016 10:41 AM
Last Updated : 05 Dec 2016 10:41 AM
இந்தியா ஏற வேண்டிய படிகள் (நவ.30) கட்டுரை அருமை. சம்பளம் முதல் நுகர்வு வரை அனைத்தும் மின்னணுப் பரிவர்த்தனை மூலம் நடைபெற வேண்டும். இடம் வாங்கப் பத்திரப் பதிவு செய்யும்போது முந்தைய ஆண்டு வருமான வரி கணக்குப் படிவம் தாக்கல் செய்ய வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கடன் வழங்கும்போது, விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தங்கத்தைக் காசோலை மூலம் வாங்க அறிவுறுத்தலாம். விளைச்சல் மற்றும் தன்மையைப் பொறுத்து 20 ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு விவசாய வரி விதிக்கலாம். பள்ளி, மருத்துவமனையில் வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். 5,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனையை கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செய்யலாம். கண்காணிக்கப்படுகிறோம் என்ற எண்ணமே தவறு செய்வதைத் தடுப்பதற்கான முதல் வழிமுறை.
- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
கலைவாணர் நினைவு இல்லம்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி ‘சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை’ என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்தேன் (நவ.29). கஷ்டம் என்று வந்தோருக்கு உதவுவதில் கலைவாணருக்கு இணையில்லை. இன்று அவரது வாரிசுகள் வறுமையில் வாடுகிறார்கள். சிரிக்க வைத்ததுடன் நம்மைச் சிந்திக்கவும் வைத்த அவர் குடும்பத்தினருக்கு மாநில அரசு வேலை வழங்க வேண்டும். நாகர்கோவிலில் உள்ள அவருடைய இல்லத்தைப் புதுப்பித்து, நினைவு இல்லமாக உருவாக்க வேண்டும்.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், ராசிபுரம்.
மக்கள் நலத் திட்டங்கள்?
மக்கள் வரிசையில் நிற்பது இதுவே கடைசி தடவையாக இருக்கும் என்று உத்தரப் பிரதேசத்தில் பேசியிருக்கிறார் பிரதமர்... ஆமா, உண்மைதான்! அதான் மானியமா குடுக்கற பணத்தை நேரா வங்கிக் கணக்குல செலுத்துறேன்னு சொல்றாருல.. அப்புறம் எப்படி வரிசைல நிப்போம். ஆமா, 1 ரூபா கொடுப்பாரு.. நாம 40 ரூபா அரிசி வாங்கிக்கணும். 6 ரூபா கொடுப்பாரு.. நாம 20 ரூபா கோதுமை வாங்கிக்கணும். 13 ரூபா கொடுப்பாரு.. நாம 45 ரூபா சர்க்கரை வாங்கிக்கணும்.
10 ரூபா கொடுப்பாரு.. நாம 35 ரூபா மண்ணெண்ணெய் வாங்கிக்கணும். 30 ரூபா கொடுப்பாரு.. நாம 180 ரூபா பருப்பு வாங்கிக்கணும். உலக வங்கி, சர்வதேச நிதியம் இவர்கள் கைகாட்டும் பணக்காரர்கள் வால்மார்ட், பெப்சி கோ, நெஸ்லே போன்றோர்களும் நம் நாட்டுக் கனவான்கள் ரிலையன்ஸ், பிர்லா, டாடா போன்றோர்களும் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கு ‘மக்கள் நலத் திட்டங்களை இல்லாமல் ஆக்குகிறீர்கள்’ அப்புறம் எப்படி சாதாரண மக்கள், நலத் திட்டங்களைப் பெற வரிசையில நிப்பாங்க.
- சுரேஷ்குமார் முத்தையா, இணையம் வழியாக....
கோவை குற்றாலக் குறவஞ்சி!
‘உள்ளாட்சி - உள்ளங்களின் ஆட்சி’ தொடரில், நஞ்சுண்டாபுரம் ராமநாதபுரம் கிராமத்தைப் பற்றிப் படித்தேன். மது, போதை சார்ந்த விஷயங்கள் சென்ற தலைமுறைக் குழந்தைகளைப் படிக்க இயலாமல் தடுத்ததை அவர் சொல்லியிருக்கிறார். விவசாயம் பொய்த்தபோதெல்லாம் வேறு வழியின்றி செங்கல் சூளைக்கு நிலங்களை விற்றார்கள். குழந்தைகளின் ஒழுக்கம், படிப்புக்கு இந்த ஊர் சரிப்படாது என்று பலர் நகரத்துக்குப் புலம் பெயர்ந்தார்கள். இப்படி வாழ்வாதாரத்தை இழந்து, தன் சொந்த மண்ணை மறந்து, நகரம் சென்றவர்களைத் திரும்ப அழைத்திருக்கிறது டி.எல்.சஞ்சீவிகுமாரின் கட்டுரை. ஊரின் இன்றைய நிலையையும், இயற்கைச் செழிப்பையும் கவித்துவ அழகோடு சொல்கிறது கட்டுரை.
- ஹேம நந்தனா, மின்னஞ்சல் வழியாக.
துரோகத்தின் துரோகம்
இலங்கையில் முன்னாள் விடுதலைப்புலி கருணா கைது செய்தி படித்தேன் (நவ.30). காட்டிக் கொடுத்த கருணாவின் ‘சேவைக்குரிய’ பலன் இன்று கிடைத்துவிட்டது. “ஈழப் போரில் ஒருவேளை நாங்கள் தோல்வியுற்றால், அதற்குக் காரணம் துரோகம் அல்லது இயற்கையாகவிருக்கும்” என்று போருக்கு முன்பே தெரிவித்த பிரபாகரனின் கணிப்பை உண்மையாக்கியவர் கருணா.
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT