Published : 16 Dec 2016 10:30 AM
Last Updated : 16 Dec 2016 10:30 AM

இப்படிக்கு இவர்கள்: புரிந்துகொள்ளப்படாத பேரிடர் மேலாண்மை!

பேரிடர் மேலாண்மை என்பது, இடர் நிகழும்போதோ, நிகழ்ந்த பின்னரோ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ற அளவிலேயே தமிழகத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. புயல் வருவது உறுதியாகிவிட்ட நிலையில், மின்சாரம் துண்டிக்கப்படும், மரங்கள் சாய்ந்துவீழும், மழைநீர் தேங்கும், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்நிலையில், நமது நாட்டில் பேரிடர் மேலாண்மை எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுகிறது? மரங்கள் சாய்ந்துவிடும் என்ற நிலையில், நகரில் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் உள்ள மரங்களை மொட்டையடித்து (கவாத்து) இருந்தால், பெருத்த சேதத்தைத் தவிர்த்திருக்கலாம். 30 ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாத பல்லாயிரக்கணக்கான மரங்களையும் காற்றினால் சாய்ந்துவிடாமல் காப்பாற்றியிருக்கலாம். அதேபோல மின் மாற்றிகளுக்கு ஸ்டேயைப் பலப்படுத்தவும் பேரிடர் மேலாண்மையில் வழி உள்ளதே?

- நலங்கிள்ளி தேன்மொழி, முகநூல் வழியாக.



பொறுப்பு வேண்டாமா?

கார் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டலாம் என்று இசட் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இச்சூழலில், ‘துணைவேந்தரின் கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் அகற்றியதற்காக காஷ்மீரில் போலீஸுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்’(டிச.13) நடத்தியிருப்பது வேதனை தருகிறது. ஒய் பிரிவு பாதுகாப்பு அந்தஸ்து கொண்ட ஒருவர் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என இக்கல்வியாளர்களுக்குத் தெரியாதா? துணைவேந்தரும் ஆசிரியர்களும் இந்நாட்டின் சட்டங்களை மதித்தால்தானே அவர்கள் கல்வி போதிக்கும் மாணவர்களும் நெறிப்படுத்தப்படுவார்கள்.

- க.குருசாமி, கோயம்புத்தூர்.



சுயமாகச் செயல்பட வாய்ப்பு

முதல்வர் பதவியில் ஓபிஎஸ் தொடர்வாரா என்ற சூழலில், ‘முதல்வர் ஓபிஎஸ்: என்ன சொல்கிறார்கள் பெரிய குளத்துக்காரர்கள்?’ எனும் கட்டுரை (டிச.13) வெளிவந்திருக்கிறது. அவரை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்திய தினகரனே ஓரங்கட்டப்பட்ட நிலையிலும் ஓபிஎஸ் தொடர்கிறார் எனில், அவரது விசுவாசம் மட்டுமல்ல, திறமையும்தான் காரணம். இப்படிப்பட்ட திறமையானவரை, சொல்வதைச் செய்யும் பொம்மையாக்கிவிடக் கூடாது. அவரைச் சுயமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆலோசனை வழங்க அனுபவமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிறையப் பேர் உள்ளனர். லாலு பிரசாத் யாதவ் எப்படி ரயில்வே துறையை வெற்றிகரமாக நிர்வகித்தாரோ அப்படிச் செயல்பட ஓபிஎஸ்ஸுக்கும் வாய்ப்புத் தர வேண்டும்.

- ப.தாணப்பன், தச்சநல்லூர்.



அஸ்திவாரம் தேவையில்லையா?

ஜெயலலிதாவின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் சம்பிரதாயத்துக்குச் சொல்லியிருந்தாலும், ‘அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்பது நூற்றுக்கு நூறு பொருந்தும். பொதுச்செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றுவார் என்று செய்திகள் சொல்கின்றன. இதே அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பிறகு, அவரின் துணைவியான ஜானகி அம்மையார் கட்சிப் பொறுப்பேற்றதைக் கட்சியின் தொண்டர்களும், மக்களும் ஏற்கவில்லை என்பது வரலாறு. தற்போது வெளியில் தெரியாத சில நோக்கங்களுக்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் சசிகலாவை ஆதரிக்கிறார்கள்.

அதற்கு, அதிமுக ஆட்சியை வீழ்த்தி திமுக கைப்பற்றப் பார்க்கிறது என்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனை தொண்டர்கள் முழுமனதுடன் ஏற்கவில்லை என்றே தெரிகிறது. தொண்டர்கள் எனும் அஸ்திவாரம் இன்றி எழுப்பப்படும் எந்தக் கோபுரமும் நிற்காது, நிலைக்காது என்ற உண்மையை அதிமுக உணரப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

- தொ.ச.சுகுமாறன், வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x