Published : 22 Nov 2016 10:45 AM
Last Updated : 22 Nov 2016 10:45 AM
வெள்ளிக்கிழமை (நவ.18) அன்று வெளியான ‘இருளும் நாட்கள்’ கட்டுரை சாமானிய மக்களின் குமுறலை அச்சு அசலாகப் பிரதிபலித்தது. எங்கள் அன்னூரில் 1,000 ரூபாய் எடுத்துச் சென்றால், முழுத் தொகைக்கும் மளிகை சாமான்கள் வாங்க வேண்டும். மீதி தரமாட்டார்கள். பெட்ரோல் ஐந்நூறு ரூபாய்க்கும் நிரப்ப வேண்டும். பேக்கரி, பேன்சி ஸ்டோர், ஹோட்டல் என்று எல்லா இடங்களிலும் இதே நிலைதான். இப்படிப் போனால் மக்கள் என்ன ஆவார்கள்? வங்கியில் வரிசையில் நின்றால் கூலித் தொழிலாளிக்கு யார் கூலி தருவார்கள்? பிரதமர் மோடி உடனே மாநில முதல்வர்களை அழைத்துப் பேசி, மக்கள் துயர் நீங்க ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நேரத்தில் விழித்துக்கொள்ளவில்லையென்றால், மக்களைச் சிரமத்தில் ஆழ்த்திய பிரதமர் எனும் அவப்பெயர் அவருக்கு வந்து சேரும்!
- பொன்விழி, அன்னூர், கோவை
நேரு காலத்தின் தேவை!
நேரு பிறந்த தினத்தையொட்டி வெளியான ‘இந்தியாவின் ஆன்மாவில் கலந்த நேரு’ (நவ.14) கட்டுரை மிகச் சரியான நேரத்தில் வந்திருக்கிறது. நான் திரும்பத் திரும்ப அதை வாசித்தேன். இன்றைய காலகட்டத்தில் தேசம் செல்லும் பாதையைப் பார்க்கும்போது நடுக்க மாக உள்ளது. எதிர்காலத்தில் அது மேலும் மோசமாக மாறும் அபாயம் இருக்கிறது. இந்தச் சூழலில் மூத்தோர் சொல்லை நினைவுபடுத்திய ‘தி இந்து’வுக்கு நன்றி.
- கல்யாணசுந்தரம், உங்கள் குரல் வழியாக.
‘தி இந்து’வுக்கு நன்றி!
‘சொரியாசிஸ் நோய்க்கு இலவச மருந்து’ (நவ.16) செய்தியை வாசித்தேன். இந்நோயில் இருந்து மீண்ட பாத்திரக்கடை வியாபாரி தினகரன், மற்றவர்களும் சொரியாசிஸ் பாதிப்பிலிருந்து விடுபட தன்னலமற்ற சேவை செய்துவருகிறார். என் நண்பர் ஒருவர் சொரியாசிஸால் பாதிக்கப்பட்டவர். இப்போது ‘தி இந்து’ செய்தியால் அவருக்கு தினகரனின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்த உலகில் ஏராளமான பிரச்சினைகள் இருப்பது உண்மைதான், ஆனால், அவற்றுக்கான தீர்வுகளும் இருக் கின்றன. இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாகத் திகழும் ‘தி இந்து’ நாளிதழுக்கு ஆயிரம் நன்றிகள்.
- முத்துசாமி, திசையன்விளை.
கேள்விக்கென்ன பதில்?
சில நேரங்களில் குழந்தைகளின் கேள்விகள் வேடிக்கையாகவும் வினோதமாகவும் (‘ரயில் என்ன சாப்பிடும்?’- நவ.18) இருக்கும். ஆனால் அவை அறிவுபூர்வமானவை. அத்தகைய குழந்தைகளின் ஐயங் களைப் போக்கப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன்வர வேண்டுமே ஒழிய “அதிகப்பிரசங்கித்தனம்” எனக் கூறி அவர்களைப் புறக்கணிக் கக் கூடாது. இதனைத் தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரை நயமாகச் சொல்லியது. நானும் ஆர்வத்துடன் வாசித்தேன். ஆனால் கடைசியில், “ரயில் என்னதான் சாப்பிடும்?” என அந்தச் சிறுவனிடம் கட்டுரையாளர் சொன்ன விஷயத்தை எழுதாமல் விட்டுவிட்டாரே?
- ந.ச.நடராசன், மேல்புதுப்பேட்டை.
மோடி செய்ய வேண்டியது!
‘மோடியும் ட்ரம்பும்’ (நவ.17) கட்டுரை அரசுக்கு, குறிப்பாகப் பிரதமர் மோடிக்கு, சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி யுள்ளது. ஏதோ ஒரு வழியில் ட்ரம்ப் வெற்றிபெற்றாகிவிட்டது. இனி அவர் பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள்மீது அதிக அக்கறை செலுத்தி அதைக் கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். வெளி நாட்டுச் சுற்றுப் பயணங்களில் அதிக அக்கறை காட்டும் நமது பிரதமர், ட்ரம்பைச் சந்தித்து பாகிஸ்தானிடம் உள்ள சிறு அணு ஆயுதங்களினால் உலகுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை உணர்த்த வேண்டும். மேலும் அமெரிக்க அதிபர் நமது காஷ்மீர் பிரச்சினையில் தலையிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- எல்.மலர்க்கொடி லோகநாதன், சிகரலப்பள்ளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT