Published : 23 Nov 2016 10:46 AM
Last Updated : 23 Nov 2016 10:46 AM

இப்படிக்கு இவர்கள்: அரிதினும் அரிதினும் அரிது!

தமிழ் எழுத்தாளர்களுக்கான விருதுத்தொகை கௌரவமா, அகௌரவமா? ( நவ.19) என்ற தலையங்கம் மகிழ்வையும் வியப்பையும் ஒரே நேரத்தில் தருகிறது. தமிழில் எழுத்தாளர்களைக் கொண்டாடுவது அரிதான நிகழ்வு. அதிலும் பரிசளித்துக் கொண்டாடுவது அரிதினும் அரிது. பெருந்தொகையுடன் விருதளிப்பது அரிதினும் அரிதினும் அரிது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் “ராஜராஜன் விருது” முடக்கப்பட்டுவிட்டது. முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த “ஔவை விருது” உள்பட, அரசு விருதுகள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கே என்பது எழுதப்படாத விதி. பல தனியார் விருதுகளும் அப்படியானவையே. சில இலக்கிய அறக்கட்டளைகள் அதன் நிறுவனர்கள் மறைந்ததும், முடங்கிவிடுகின்றன. தலையங்கம் கூறும் கருத்து இன்றைய சூழலுக்கு அவசியமானது.

-வெற்றிப்பேரொளி, பெரம்பூர்.



ரூபாயில் இந்தித் திணிப்பு!

புதிய ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள (நவ.19) செய்தியை வாசித்தேன். இந்தி எதிர்ப்பைத் தங்கள் கொள்கையாகக் கொண்ட, திராவிடக் கட்சிகளே கண்டுகொள்ளாத நேரத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் லோகோ, பெயர்களில் எல்லாம் இப்படி இந்தித் திணிப்பு நடந்தபோது கம்யூனிஸ்ட்கள் எங்கே போனார்கள்? அப்போது காங்கிரஸ் ஆட்சி என்பதால் காணாமல் போய்விட்டார்களோ? இந்தி திணிப்பு அரசியல் சாசன விரோதம் என்றால் நடந்திருப்பது நியாயமல்ல. தர்மமுமல்ல. இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

சண்முகம், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



பொறுப்பேற்க வேண்டும்

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு எடுத்த முடிவுக்கு, ஒவ்வொரு இந்தியரும் தலை வணங்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து, சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறிய மருத்துவமனைகளால் பச்சிளம் குழந்தைகளும் நோயாளிகளும் மரணம் அடைந்தது வருத்தத்துக்கு உரியது. இவற்றைத் தடுக்கத் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை. இது மத்திய அரசின் நிர்வாகத்திறமை இன்மைதான். ஊடகங்கள் இதை மக்களிடம் எடுத்துச்சென்றாலும் மக்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும், மத்திய அரசு இந்த மரணத்திற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும்.

-த.தினேஷ், கடலூர்.



பகடியில் தோய்ந்த கவிதை!

லிபி ஆரண்யா எழுதிய, ‘சற்றே அகட்டி நில்லுங்கள்’ (நவ.16) கவிதையை வாசித்தேன். அழுத்தமான கவிதை. நாட்டு மக்களைத் துச்சமாக மதிக்கும் அரசின் ஆணவப் போக்கை, பெருமுதலாளிகளின்பால் ஆதரவான போக்கை அழகாய், அருமையாய்ப் பதிவு செய்திருக்கிறார் கவிஞர். பல பக்கங்கள் கொண்ட கட்டுரை எழுதி, பதிவு செய்யவேண்டிய மக்கள் துயரை பகடியில் தோய்த்து, அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

-ரஞ்சனி பாசு, மின்னஞ்சல் வழியாக.



காஞ்சிப்பட்டின் நிலை!

‘பொலிவு இழக்கும் காஞ்சிப்பட்டு நெசவுத் தொழில்’ (நவ 20) சிறப்புக் கட்டுரை படித்தேன். அல்லல்பட்டு, லோல்பட்டு, கஷ்டப்பட்டு வாங்கிய பட்டு என பட்டிமன்றங்களில் நகைச்சுவையாய் கூறுவார்கள். அதுவே பட்டு நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவமாய் மாறியிருப்பது வேதனை. தங்கம் மற்றும் வெள்ளிச் சரிகையினால் நெசவு செய்யப்பட்ட பட்டுப் புடவையை வாங்க ஏழை மக்கள் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்காக கொண்டு வரப்பட்டதே எச்எப் சரிகை. அதுவே இன்று அசல் காஞ்சிபுரம் பட்டு விற்பனை சரியக் காரணமாகியிருப்பது வேதனை.

இதனைத் தடுக்க இரு வகையான பட்டுச் சேலைகளையும் தனித்தனியே விற்பனை செய்ய வழி செய்ய வேண்டும். அதனைப் போலவே போலிப்பட்டு உற்பத்தியையும், பட்டு கூட்டுறவுச் சங்கத்தின் பெயரைப் போல் போலி பெயர் வைப்பவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும். அப்படிச் செய்தால் பட்டுச் சேலை கட்டிய திருமணப் பெண் போல பட்டு நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் அழகாகும்.

-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.



எதுவும் நடக்கலாம்

எதையும் நியாயப்படுத்த எந்த எல்லைக்குச் செல்லவும் தயாராக இருக்கும் அரசு இது என்பதை ‘இருளும் நாட்கள்’ (நவ.18) கட்டுரை தெளிவாக்கியது. முதலில் இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை அரசின் நிதிதுறை உயர்அமைப்பினரோ, அமைச்சரவையின் முடிவாகவோ, அல்லது ரூபாய் நோட்டுகளுக்கு தலைமையிடமான ரிசர்வ் வங்கியோ இந்த அறிவிப்பை செய்யவில்லை. நாட்டின் பிரதமரே இந்த அறிவிப்பை செய்தார். ஆனால் இதன் குளறுபடிகளுக்கு விளக்கமளிக்க மக்களவைக்கு பிரதமர் வரமாட்டார் என்பது நியாயமற்றது.

ஒரே இரவில் திடீரென்று சூப்பர் மேனாகி இந்த நாட்டை தன்பக்கம் திருப்பிடமுயன்று, இடறிவிழுந்து படுகாயமுற்றிருக்கிறார் மோடி. இவை ஒருபுறமிருக்க, கட்டுரை சொல்லி இருப்பது போல் இந்த நாட்டில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மறுக்கமுடியாது.

-சிவ.ராஜ் குமார். சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x