Published : 15 Nov 2016 10:40 AM
Last Updated : 15 Nov 2016 10:40 AM
500, 1,000 ரூபாய் நோட்டுத் தடையால் நாடே களேபரத்தில் இருக்கிறது. தெரிந்தவர்களுக்குச் சில்லறை கொடுக்கவே மக்கள் தயங்குகிறார்கள். இந்த வேதனையிலும் நெல்லையில் பாலாஜி பவன் என்ற ஓட்டல் உரிமையாளர் இலவசமாக உணவு வழங்குவது மிகவும் மெச்சத் தகுந்தது (நவ.11). இந்த மனிதர் மக்களின் துயரத்தில் பங்குகொள்வது பாராட்டத்தக்கது.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
வைகோவின் போராட்டம்
காவிரி டெல்டா பகுதிகளில் தொடங்கவிருந்த மீத்தேன் எரிவாயுத் திட்டம் நிரந்தர ரத்து, அந்தப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் வாயிற்றில் பால் வார்க்கும் (நவ.11) செய்தி. இதை எதிர்த்துப் பல்வேறு மக்கள் போராடினார்கள். அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். ஆனால், முழு மூச்சாக இறுதி வரை போராடியவர் வைகோ. அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ, அணு உலை, மீத்தேன் திட்டம் போன்ற தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் விஷயங்களில் வைகோவின் போராட்டத்தை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
- பொன்விழி, அன்னூர்.
அரசுப் பள்ளிகள் உள்ளாட்சிகளிடமா?
‘உள்ளாட்சிகளிடம் அரசுப் பள்ளிகள் ஒப்படைப்பு’ குறித்த கருத்தை உள்ளாட்சி பற்றிய தொடரில் வாசித்தேன். அவரது நல்ல நோக்கம் புரிகிறது. ஆனால், உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் செயல்பட்டபோதும், முறைகேடுகள் நடந்தன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போது ஆசிரியர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத சூழல் இருந்தது. உள்ளாட்சித் தலைவர்களின் மனம் கோணாமல் செயல்பட வேண்டியிருந்தது. ஊதியம் வழங்குவதில் முறைகேடுகள் காணப்பட்டன. இந்தக் குறைகளை, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். கவனத்துக்கு ஆசிரியர் சங்கங்கள் கொண்டுசென்றதால், உள்ளாட்சிப் பள்ளிகளை அரசுப் பள்ளிகளாக மாற்றினார். தற்போது நடைபெறும் தவறுகளுக்கு உயர்மட்ட அதிகாரிகள் முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை பொறுப்பு ஏற்க வேண்டுமே தவிர, அரசு மட்டுமல்ல!
- சி.மாதவன், தலைமை ஆசிரியர், (ஓய்வு), காரைக்குடி.
விருதுக்கான இலக்கியமா?
குழந்தை இலக்கிய ஆளுமைகள் குறித்த தலையங்கம் வரவேற்புக்குரியது (நவ. 12). மற்ற இலக்கியங்களைப் போல் குழந்தை இலக்கியம் பேசப்படுவதில்லை என்ற கருத்து உண்மையே. குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதில் கவனம் செலுத்தும் எழுத்தாளர்களும்கூட, அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. விருதுகளுக்காக மட்டுமே எழுதப்பட்டு வருகிறது. குழந்தைகளும் வாசிப்பில் கவனம் செலுத்தாமல் கணினியில் காணாமல் போனதும் ஒரு காரணம். குழந்தைகளை வாசிக்க வைப்பதில் எழுத்தாளர்களுக்கும் பெற்றோருக்கும் பங்குண்டு.
- பொன். குமார், சேலம்.
நடவடிக்கை வேண்டும்
கொடைக்கானலில் கள்ளத்தனமாக விற்பனையாகும் போதைக் காளான் பற்றியும் இது கிடைக்கும் இடத்தைப் பற்றியும், சில ஒளிப்படங்களையும் ‘தி இந்து’ (அக்.12) நாளிதழ் வெளியிட்ட அன்றே காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இரு உயிர்கள் பறிபோயிருக்காது (நவ.14). இந்த மாதிரி விஷயங்களிலாவது பத்திரிகை செய்தியைப் பார்த்து காவல் துறை உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கர்நாடகாவிலிருந்தும் இளைஞர்கள் செல்வதாகத் தெரிகிறது. கர்நாடக அரசும் அம்மாநில ஊடகங்களும் அந்த மாநில இளைஞர்களுக்குத் தகுந்த எச்சரிக்கை அளிக்க வேண்டும்.
- குழந்தைவேலு, இணையம் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT