Published : 18 Nov 2016 11:17 AM
Last Updated : 18 Nov 2016 11:17 AM
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் 1,201 கோடி ரூபாய் கடனை எஸ்பிஐ கணக்குநீக்கம் செய்திருக்கிறது என்ற (நவ.17) செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவையான உணவுப்பொருளை உற்பத்தி செய்யும் புனிதமான பணி விவசாயம். அதில் ஏற்படும் நஷ்டத்துக்கு அரசாங்கம் அந்தக் கடனத் தள்ளுபடி செய்வதையாவது புனிதமாகக் கருதலாம். மது உற்பத்தி செய்து, மக்களின் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் ‘புனித பணி?’யைச் செய்யும் மல்லையாவுக்குக் கணக்குநீக்கம் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
மல்லையாவின் கோவா சொகுசு பங்களாவை எஸ்.பி.ஐ.யால் விற்க முடியவில்லை என்ற காரணத்துக்காக, கணக்குநீக்கம் செய்கிறோம் என்பது எந்த வகையில் நியாயம்? நிர்ணயித்த தொகைக்கு அந்த பங்களா விலைபோகாவிட்டால், சற்று குறைவான விலைக்கு விற்றால் என்ன? கணக்குநீக்கம் செய்வதற்குப் பதிலாக, வந்தவரை வங்கிக்கு லாபம்தானே. நிதியமைச்சரும் அது மோசமான கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார். வசூலிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைச் சரியாகவும் முறையாகவும் சொன்னால்தானே மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும்.
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
வைக்கோல் புகையும் வாகனப் புகையும்
டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள மாசுக்கு அண்டை மாநிலங்களில் விவசாயிகள் எரிக்கும் வைக்கோல் புகை மட்டுமே காரணமல்ல. வாகனங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது - ‘சுத்தமான காற்றுக்கு என்ன வழி?’ கட்டுரை படித்தேன் (நவ.16). ஏற்கெனவே, ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்களை இயக்க கட்டுப்பாடு கொண்டுவந்ததைப் போல, பொதுப்போக்குவரத்தை மக்கள் வெகுவாகப் பயன்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த வருடக் குளிர்காலத்துக்குள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, டெல்லி நகருக்குள் உள்ள மாசினைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம்!
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.
பயனுள்ள முயற்சி
அனைத்துத் தரப்பினருக்கும் பயன்தரும் விஷயம் ‘ஐநூறும் ஆயிரமும்’ என்ற தலைப்பில் வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை வெளியிடுவது. 1978-ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இதுபோன்ற நடைமுறையைப் பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இல்லத்தரசிகள்கூடத் தங்கள் சேமிப்பை மீண்டும் காசாகப் பார்க்க முடியுமா என்ற கவலையில் இருக்கிறார்கள். அவர்களின் கவலைகளையும் சந்தேகங்களையும், இலவச அழைப்பின் மூலம் போக்கும் இந்த அரிய முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. வாசகர்களின் சந்தேகங்களுக்கு ஏனோ தானோ என்று பதிலளிக்காமல் நிபுணர்களைக் கொண்டு பதில் தருவது வரவேற்கத்தக்கது.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
வீரமணியும் எம்ஜிஆரும்!
நவ.16-ல் வெளியான, ‘எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?’ கட்டுரை வாசித்தேன். மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் தனி மனித ஆளுமைகள், விழாக்கள் எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் உத்தியை ஆர்எஸ்எஸ் வெகுகாலமாகச் செய்துவருகிறது. பாரதியை இரு சாராரும் கொண்டாடுவதும், கம்பரசத்தில் மயங்கி, பொதுவுடைமைக்காரர்கள் விழா எடுத்ததும் வரலாறு. ஆனால், பெரியார் இத்த கைய போக்குகளைக் கடுமையாக எதிர்த்தவர். பிரபலமான ஒன்றின் பின்னால் சென்று எதையும் பெறும் குறுக்குவழியை அவர் பின்பற்றியதே இல்லை. எம்ஜிஆர் யார் என்பதை உள்ளது உள்ளவாறு சொல்வதும் விமர்சிப்பதும்தான் பெரியார் வழி.
- ராஜன்கிட்டப்பா, இணையதளம் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT