Published : 03 Nov 2016 12:48 PM
Last Updated : 03 Nov 2016 12:48 PM

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கும் சிமிக்கும் தொடர்பு இல்லை!

மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தோம், ‘தி இந்து’வில் வெளியாகியிருந்த ‘சிமி இயக்கம் உருவானது எப்படி?’ (02.11.2016) செய்தியில், ‘ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்’ பெயரைப் பார்த்துவிட்டு. 1947-ல் தொடங்கி கடந்த 69 ஆண்டுகளாகத் தொடர்ந்து பரந்த தளத்தில் அகில இந்திய அளவில் செயல்பட்டுவரும் அமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த். சமூகச் சீர்திருத்தத்துடன், சமய நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆற்றிவரும் பணிகள் வெளிப்படையானவை. இதனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கு அறியும். மது, ஆபாசம், வட்டி போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் போராடிவருவதைத் தாங்களும் நன்கறிவீர்கள். தவிர, வெள்ளம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது அது மேற்கொள்ளும் அறப்பணிகள் மதம், இனம், மொழி, நிறம் கடந்தவை என்பதை நாடே நன்கு அறியும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாணவர் அமைப்பாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) செயல்பட்டுவருகிறது. மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களுக்காகவும், கல்விக்காகவும் அகில இந்திய அளவில் செயல்பட்டுவரும் அமைப்பு இது. சென்னை பெருவெள்ளத்தின்போது, மழையில் சேறு படிந்த கோயிலைச் சுத்தப்படுத்தி சேவையாற்றிய எங்கள் மாணவர் அமைப்பின் பணியை ‘தி இந்து’ நாளிதழ் சிறப்பித்துப் பதிவுசெய்தமையை இங்கு நினைவுகூர்கிறேன். பயங்கரவாதத்தை எதிர்த்து தொடர்ந்து நாங்கள் எழுப்பிவரும் குரல்கள் நம்முடைய ‘தி இந்து’ நாளிதழிலேயே வெளிவந்துள்ளன. இந்நிலையில் ‘சிமி’ அமைப்போடு எங்கள் அமைப்பைத் தொடர்புபடுத்தி வந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. ‘சிமி’ ஒருபோதும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாணவர் அமைப்பாக இருந்தது இல்லை. அந்த அமைப்பிற்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்க்கும் அமைப்பு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்பதையும் இங்கு அழுத்தமாகப் பதிவுசெய்கிறோம்.

- ஏ.ஷப்பீர் அஹமத், மாநிலத் தலைவர்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், சென்னை.



என்னவென்று சொல்வது?

தொழில்புரியச் சிறந்த மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 18-வது இடத்தில் இருப்பது குறித்த கட்டரை படித்து அதிர்ந்தேன் (01.11.16). தொழில் தொடங்க முட்டுக் கட்டைகள், லஞ்சம் மட்டுமின்றி, மத்திய அரசின் சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவராதது ஆகியவற்றால் தமிழ்நாட்டுக்கு இந்த நிலை. இன்னும் என்னென்ன மாதிரி தமிழகம் ஆகப்போகிறதோ?

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).



அமெரிக்காவின் நிறைவேறாக் கனவு!

அமெரிக்காவைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திராத விஷயங்களை ‘அமெரிக்காவும் மக்களாட்சியும்’ கட்டுரையில் ஆசிரியர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் (01.11.16). நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் குடியிருக்க வீடுகளின்றி தெருவில் அலைவோர் உள்ளனர் என்பது மனதை உருக்குகிறது. நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் 240 ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாத கனவுகள் உள்ளன போலும்.

- எம்.லோகநாதன், சிகரலப்பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x