Published : 24 Nov 2016 10:07 AM
Last Updated : 24 Nov 2016 10:07 AM
வலிமையான இடதுசாரிகள்
வே.வசந்திதேவி எழுதிய, ‘புரட்சியின் நூற்றாண்டில் சில கேள்விகள்’ (நவ.21) கட்டுரை இடதுசாரிகளுக்கு அருமையான பாடம். மார்க்சியம், சோஷலிசம், ஜனநாயகம் என்பவை ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தில் அமர்வதற்கான அரசியல் முழக்கங்கள் அல்ல. உன்னதமான வாழ்வுக்கான வழிகளை மக்களுக்குக் கூறும் கோட்பாடுகள்.இளைய சமூகத்துக்கு இதைப் புரிய வைக்கவேண்டும். கட்சிகளைச் சாராமல், சமூகநலப் பணிகளைச் செய்பவர்களை இணைத்துக்கொண்டும் இடதுசாரிகள் செயல்படவேண்டும். எல்லோரையும் ஒன்றிணைத்து ஒரு வலிமையான கூட்டுச் செயல்பாட்டை உருவாக்குதன் மூலமே இடதுசாரிகளின் செயல்பாடுகள் வலிமையானதாக மாறும். இதைச் செய்ய மறுக்கிறார்கள். தேர்தல் என்று வரும்போது இடதுசாரி கொள்கைகளுக்குத் துளியும் பொருந்தாத கட்சிகளுடன் சேர்கிறார்கள். வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார்கள். இடதுசாரிக் கொள்கைகளை விதைக்க இத்தகைய செயல்பாடுகள் பயன்படாது.
-சு.மூர்த்தி, அமைப்பாளர், மக்களாட்சிக்கான கல்வி இயக்கம், மின்னஞ்சல் வழியாக.
அன்பே கடவுள்
‘உலக மசாலா’ பகுதியில் வெளியான, டாஸ்மேனியாவில் வசிக்கும் 12 வயது சிறுவன் கேம்பல் செய்யும் செயல் (நவ.19) ஆச்சரியப்படுத்தியது. இந்தச் சின்ன வயதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக இதுவரை 800-க்கும் மேற்பட்ட பொம்மைகளை இலவசமாக வழங்கியுள்ளான். அவர்கள் முகத்தில் புன்னகையைப் பார்க்க இத்தகைய செயலை அவன் செய்வது வியப்பளிக்கிறது. அன்பைப் பெறவும், அன்பை அளிக்கவும் ஆண்டவன் எவ்வளவு வழிகளை உருவாக்கியுள்ளான் என்பதை கேம்பலின் செய்கை உணர்த்துகிறது.
-ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
பாரதிக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம்?
பாரதியார் விருதுக்கு வைஜயந்தி மாலா பாலி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை (நவ.21) படித்தேன். வைஜயந்தி சிறந்த நடிகை. உன்னத மான நடனக்கலைஞர். விருதுக்கும் பட்டங்களுக்கும் இவர் தகுதியானவர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் பாரதியாருக்கும், நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றுக்கும் என்ன சம்மந்தம்? அவரது பெயரில் வழங்கப்படும் விருது ஒரு கவிஞருக்கோ எழுத்தாளருக்கோதான் தரப்பட்டிருக்க வேண்டும். விருது வழங்குவோர் வருங்காலத்திலாவது இதுபற்றி சிந்திக்க வேண்டும்.
-கல்கிதாசன், எழுத்தாளர், மின்னஞ்சல் வழியாக.
மறையவில்லை மனித நேயம்
பணத்தை மட்டுமே மதிக்கும் காலத்தில், கோவையில் உண்மையான மக்கள் சேவையாக, கடந்த இருபது ஆண்டுகளாக இருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் பாலசுப்ரமணியனின் மறைவுக்கு கோவை மக்கள் பெரும் திரளாக அஞ்சலி செலுத்தியது நெகிழ வைத்தது (நவ.23). சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது, மக்கள் அவர் மேல் கொண்ட அன்பைக் காட்டுகிறது. மக்களுக்கு அவர் ஆற்றிய சேவையை வருங்காலச் சந்ததியினரும் பின்பற்றட்டும்.
-எம்.விக்னேஷ், மதுரை.
புகைப்பழக்கமும், அரசும்!
புகைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதை நிறுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஆழமாக அலசியுள்ளது ‘புகைப்பதை நிறுத்தும் மனவுறுதியை எங்கிருந்து பெறுவது?’ (நவ.22) கட்டுரை. புகைப்பழக்கத்திற்குப் பெண்கள் உள்பட இளைஞர்கள் அடிமையாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சினிமா மோகத்தாலும், ‘ஸ்டை’லுக்காகவும் புகைக்க ஆரம்பிக்கும் இளைஞர்கள், காலப்போக்கில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். தனிநபர் கட்டுப்பாடு மட்டுமின்றி, அரசும் சில நடவடிக்கைகளின் மூலம் புகைப்பழக்கத்தைக் குறைக்க முடியும். ‘புகை, மது காட்சிகள் இல்லாத படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு’ என்றுகூட அறிவிக்கலாம்.
-எஸ்.வெங்கடசுப்பிரமணியன், ஆசிரியர், கல்லிடைக்குறிச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT