Published : 04 Nov 2016 10:52 AM
Last Updated : 04 Nov 2016 10:52 AM
தமிழக மக்களின் மனதில் எழும் நியாயமான ஆதங்கத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறது, ‘இந்த முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டன என்று அரசு விளக்க வேண்டும்!’ என்கிற தலையங்கம் (2.11.16). தமிழக முதல்வர் ஜெயலலிதா, நியாயமான காரணங்களுக்காக மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் இந்த மூன்று திட்டங்களையும் எதிர்த்துவந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இப்போது திடீரென முதல்வர் உடல் நலம் குன்றியிருக்கின்ற நிலையில், மின்துறை அமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர் ஆகியோர் இம்மூன்று திட்டங்களுக்கும் சம்மதம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏன் இந்த அவசரம்? முதல்வருக்குத் தெரிந்துதான், அவருடைய சம்மதத்துடன்தான் இந்த மாற்றம் ஏற்பட்டதா? அவர் முடிவெடுக்கும் நிலையில் இல்லை என்பதும், அமைச்சரவைக் கூட்டங்களிலும் இவை விவாதிக்கப்படவில்லை என்பதும் கவலை தருகின்றன. தலையங்கம் கூறுவதுபோல், ‘இந்த முடிவுகள் எந்த அடிப்படையில், எந்தச் சூழலில் எடுக்கப்பட்டன’ என்பதைத் தமிழக அரசு விளக்க வேண்டும். அது அரசின் ஜனநாயகக் கடமையும்கூட.
- பேராசிரியர் தா.சாமுவேல் லாரன்ஸ், மதுரை.
வரவேற்புக்குரிய உத்தரவு
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டக் கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது, தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி (3.11.16). இப்படி கேரளத்தைப் போன்று, ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மட்டும் முக்கியத்துவம் அளித்துவிட்டுப் பிற மாநிலங்களின் வாழ்வாதாரத்தைத் தடுப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும். எந்த ஒரு பெரிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பும் அதனை முழுவதும் ஆராய்ந்து பார்த்த பிறகே சம்பந்தப்பட்ட துறையினர் அனுமதி அளிக்க வேண்டும்.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், ராசிபுரம்.
மார்ஷல் நேசமணியும் தாணுலிங்கமும்!
ஜி.ராமகிருஷ்ணனின், ‘மொழியுணர்வு நீடிக்கிறதா?’ என்கிற கட்டுரையில் (1.11.16) கம்யூனிஸ்ட் தலைவர் களான ஜீவா, கே.டி.கே.தங்கமணி ஆகியோர் மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனாரை ஆதரித்து, அவரது தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்கு உறுதுணையாக இருந்தது குறித்த பதிவு பாராட்டுக்குரியது. ராமமூர்த்தி, பூபேஷ் குப்தா முயற்சிகளைக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தது தற்போதைய இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். மேலும், திருத்தணியைப் பெறப் போராடிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடிய மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி, குஞ்சன் மற்றும் தாணுலிங்கம் ஆகியோரும் தியாகிகள் வரிசையில் கொண்டாடப்பட வேண்டியவர்களே!
- இரா.இராஜா பாஸ்கர், மதுரை.
150 நாள் வேலை
100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்கிற திருநாவுக்கரசரின் கோரிக்கை நியாயமானதே (3.11.16). பாஜக அரசு வந்த பின்னர், கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது ஒவ்வொரு நிதியாண்டும் குறைந்துவருவது வேதனை தருகிறது. கிராமப்புற விவசாயிகளை காப்பதற்கு பாஜக அரசு இந்தத் திட்டத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
- ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT