Published : 01 Nov 2016 10:56 AM
Last Updated : 01 Nov 2016 10:56 AM

அப்பாவின் ஞாபகம்!

என் அப்பாவை ஞாபகப்படுத்தியது ‘நான் எப்படிப் புகைப்பதை நிறுத்தினேன்?’ கட்டுரை. அவர் செயின் ஸ்மோக்கர். அவர் இருந்தால் வீடே சிகரெட் புகையும் சிகரெட் துண்டுகளுமாகக் காட்சியளிக்கும். அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ‘சிகரெட் குடிச்சாதான் ரிலாக்ஸ்ட் ஆக இருக்கிறது’ என்ற காரணம். ஒருநாள் என் நான்கு வயதுத் தம்பி, வீசி எறியப்பட்ட ஒரு துண்டு சிகரெட்டை எடுத்து அப்பா குடிப்பது மாதிரியே பாவனை பண்ணிக்கொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்துவிட்டார் அப்பா. அதன் பின் சிகரெட்டைத் தொடவே இல்லை. எல்லோருக்கும் ரொம்ப ஆச்சரியம்… எப்படி நினைத்தவுடன் அதை விட்டார் என்று. சக மனிதர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் இருந்தால் போதும், தீய பழக்கங்களிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம்.

- ஜே.லூர்து, மதுரை.



லா.ச.ரா.வைக் கொண்டாடுவோம்

ஒரு பக்க அளவில் கட்டுரை வெளியிட்டு, லா.ச.ரா. எனும் பெருங்கலைஞனின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பித்துள்ளது ‘தி இந்து’. எழுத்தாளராக உலகறிந்த லா.ச.ரா.வைத் தந்தையாய் சப்தரிஷி பார்த்த கோணம் புதிது. யாரும் சொல்லாதது. சப்தரிஷியின் நடையும் லா.ச.ரா.வின் மயக்க நடையைப் போல் அமைந்ததில் மகிழ்ச்சி. “நான் யாருக்காகவும் எழுதவில்லை... எனக்காக, என் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்” என்று சொன்னவர் லா.ச.ரா. அவர் மௌனத்தின் நாவுகளால் தன் படைப்பில் பேசிய மா கலைஞானியும் கூட. வாசகனை உள்ளொளி நோக்கிப் பயணிக்க வைத்தவர். அவர் அன்றும் இன்றும் என்றும் சிந்தா நதியாக வாசகர் மனதில் ஓடிக்கொண்டேயிருப்பார். இளம் வாசகர்களுக்கு அவரது ஒட்டுமொத்த எழுத்துகள் எங்கே கிடைக்கும் என்று மிகத்தெளிவாக பதிப்பக முகவரியோடும் தொடர்பு முகவரியோடும் தந்தது சிறப்பு.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.



ஆகியவையும் போன்றவையும்

நாம் எழுதும் உரைநடையில் ‘ஒரு, மற்றும், ஆகியவை, போன்ற வார்த்தைகளை எவ்விதம் பயன்படுத்துவது என்ற விளக்கமும் விவரிப்பும் தெளிவுடன் இருந்தன. and என்ற ஆங்கிலச் சொல்லின் இலக்கண மரபுவழியில் வந்த தமிழ்ச் சொல்லான மற்றும் என்பதைத் தவிர்த்து எழுதலாம் என்ற கருத்தும் மிகவும் ஏற்புடையதே. மேலும், அந்த வார்த்தை ‘எந்த வகையில் தமிழின் வளத்தையோ திறனையோ கூட்டுகிறது?’ என்ற கேள்விக்குப் பதில், ஒன்றுமில்லை என்பதே. ஆனால், ஆகியவை, போன்றவை என்ற இரண்டு வார்த்தை களுக்கும் வேறுபாடு உண்டு. ‘ஆகியவை’ என்பது குறிப்பிட்டுச் சொல்லும் பொருட்களை மட்டுமே குறுப்பிடுவதாகும். உதாரணம்: வெண்டைக்காய், கேரட், முட்டைக் கோஸ் ஆகியவற்றைக் கொடு. ‘போன்ற’ என்பது, குறிப்பிடப்பட்ட காய்கள் இல்லாவிடில், அது போன்ற வேறு காய்களைக் கொடு என்பதாகும். இரண்டு வார்த்தைகளுக்கும் நுணுக்கமான, சிறிய வேறுபாடு உள்ளது.

- சா.க.மூர்த்தி, சென்னை.



நல்லதைப் பாருங்கள்

அவசியமான ஒரு பிரச்சினையை மிகவும் எளிமையாகப் பேசுகிறது, ‘இஸ்ரேலிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேறொரு விஷயம் இருக்கிறது மோடி!’ கட்டுரை. பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இஸ்ரேலைக் கொண்டாடுவது நாம் அறிந்ததுதான். கொடூரமான ராணுவம் மற்றும் அடாவடி அரசியல் நடவடிக்கைகள் இஸ்ரேலின் ஒரு பக்கம் என்றால், நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மையிலும் சிறப்பான மறுபக்கம் உள்ளது. நல்லதைப் பார்க்கவும் மாட்டேன், பேசவும் மாட்டேன் என்றால் எப்படி?

- பொறையார் ரகு, மின்னஞ்சல் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x