Published : 28 Nov 2016 10:06 AM
Last Updated : 28 Nov 2016 10:06 AM

இப்படிக்கு இவர்கள்: வளமான பாரதம்

இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல் படுத்த வேண்டும் எனப் பலரும் பல ஆண்டுகளாகப் பேசிவந்தபோதும், அதனைச் செயல்படுத்த முடியாமல் பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் கிடப்பிலேயே இருந்தது. அதனைச் செயல்படுத்த கடந்த 33 ஆண்டு காலமாகப் போராடிவந்த திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சந்தித்த அனுபவங்களுக்கும் எதிர்கொண்ட சவால்களுக்கும் பரிசாக, 27.02.2012-ல் நதிகளை இணைக்கக் குழு அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பு வெளியானது.

ஆனால், அந்தக் குழுவும் செயல்படாத குழுவாகவே இருந்தது என்பதையும், பிறகு பாஜக அரசின் நீர்வளத் துறை அமைச்சரான உமாபாரதி 2014-ல் எடுத்த நடவடிக்கையால், நதிகளை இணைப்பதற்கான சிறப்புக் குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் தந்தது என்பதையும் ‘தி இந்து’வுக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தந்த பேட்டி (நவ.19) தெளிவுபடுத்தியுள்ளது. இருப்புப் பாதைகளால் இந்தியாவை இணைத்ததுபோல், நதிகளும் இணையுமானால் வளமான பாரதம் உருவாகும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை



நல்ல பாதையில் செல்வோம்

‘மனிதாபிமானத்தின் மருத்துவ முகம்’ (நவ. 23) கட்டுரையை, வழக்க மான செய்தியாக இருக்கலாம் என்று தான் வாசிக்க ஆரம்பித்தேன். கட்டுரை முடியும் தறுவாயில், என் கண்களில் நீர்த்துளிகள். கோவை டாக்டர் வி.பாலசுப்பிரமணியன் போன்ற மகத்துவ மனிதர்கள் நம் சமூகத்தில் அரிதாகிக்கொண்டே வருகிறார்களே என்கிற ஏக்கம்தான் காரணம். ‘இவரைப் போன்றே நாமும் நம் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என ஏதேனும் ஒரு மருத்துவர் நினைத்தாலே, நிச்சயம் அது இந்தக் கட்டுரைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

- க.ஐயம்பெருமாள், சிங்கிகுளம்



தமிழ்த் தொண்டு

தமிழ் எழுத்தாளருக்கான விருதுத் தொகை கௌரவமா, அகௌரவமா? தலையங்கம் (நவ.19) படித்தேன். தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் விருதுத்தொகை மிகமிக சொற்பம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழகத்தில் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தி, தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திப் பல விருதுகளை அறிவிக்கலாம். இதனை சிறந்த தமிழ்த் தொண்டாகவும் இளைய எழுத்தாளர்களுக்கு ஊக்கமூட்டும் செயலாகவும் செய்ய முன்வர வேண்டும்.

- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை



வங்க தேசமும் தூதரக உறவும்

இந்துக்கள் சிறுபான்மையினராகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையின ராகவும் உள்ள வங்கதேசத்தில், ஒவ்வொரு நாளும் சுமார் 632 இந்துக்கள் வெளியேறுகின்றனர். இவ்வாறு இந்துக்களின் வெளியேற்றம் தொடர்ந்தால், இன்னும் 30 ஆண்டுகளில் வங்கதேசத்தில் இந்துக்கள் இல்லாத நிலை ஏற்படும் என்று வங்கதேசத்தைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் அபுல் பர்கத் எழுதிய புத்தகம் கூறுகிறது என்ற செய்தியை (நவ.24) வாசித்தேன். வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் தருகிற இந்தியா, வங்கதேசத்தின் குடிமக்களாகிய சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? தூதரக உறவுகளை வேறு எதற்காகப் பயன்படுத்தப்போகிறோம்? பிரதமர் அண்டை நாட்டில் நடக்கும் இப்பிரச்சினை பற்றியும் பேசுவாரா என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுகின்றன. இப்பிரச்சினை இலங்கைக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன்.

- கே.கருப்பசாமி, ஏரல்



மூன்றில் இரண்டு பங்கு

பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய அமெரிக்கா பற்றிய தொடர் சிறப்பாக இருந்தது. நவ.23ல் வெளியான, ‘மையமும் மாநிலங்களும் - அமெரிக்காவும் இந்தியாவும்’ கட்டுரையில், கடைசி பத்திக்கு முந்தைய பத்தியில், காங்கிரஸில் ‘இரண்டில் மூன்று பங்கு’ என்று வந்திருக்கிறது. அது சரியல்ல. காங்கிரஸில் ‘மூன்றில் இரண்டு பங்கு’ என்றே இருந்திருக்க வேண்டும்.

- எஸ்.ஜான் மதியழகன், மின்னஞ்சல் வழியாக

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x