Published : 16 Nov 2016 10:39 AM
Last Updated : 16 Nov 2016 10:39 AM

இப்படிக்கு இவர்கள்: கட்டுரை எழுப்பிய நினைவலைகள்!

ஞாயிறு அன்று (நவ. 13) வெளியான கருத்துப் பேழை பக்கங்களின் ஒருபுறத்தில் இன்றைய தமிழிலக்கிய உலகின் நிலையையும் மறுபுறத்தில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளையும் அசைபோடச் செய்தன. வாஸந்தியின் கட்டுரை (ஆணாதிக்கத்தின் வெற்றி)1960-களில் ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின் விடுதலைக் குரல் ஓங்கி ஒலித்த காலத்தில், இர்விங் வேலஸ் ‘த மேன்’ என்ற நாவல் மூலம் அந்த ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க அதிபராகக் கற்பனையில் அமர்த்தி, மனிதனின் நிறவெறி உணர்வைக் கேள்விக்கு ஆளாக்கினார். தொடர்ந்து ஜெஃப்ரி ஆர்ச்சரின் ‘ப்ரோடிகல் டாட்டர்’ நாவல் ஒரு பெண்ணை அமெரிக்க அதிபராக கற்பனை செய்ததையும் நினைவுகூரச் செய்தது. ட்ரம்ப் பற்றிய கட்டுரை 1985 முதல் இந்தியாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சி ‘மல்டி பில்லியனர்’களுக்கு மட்டுமே சொந்தமாகியிருப்பதையும் நினைவுகூரச் செய்தது.

- வீ.பா.கணேசன், எழுத்தாளர், மின்னஞ்சல் வழியாக.



அரசியல்வாதிகளும் வங்கியும்

நாடு முழுவதிலும் உள்ள மக்கள் வங்கியில் பணத்தை மாற்றும் புகைப்படச் செய்திகளைப் பார்த்தேன். இதே போல அரசியல் தலைவர்களும், கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்றோரும் வங்கியில் இருக்கும் பணத்தை வங்கிக்குச் சென்றுதானே எடுக்க முடியும்? ஆனால், அப்படி யாரும் சென்றதாக, எந்த செய்தித்தாள்களிலும் செய்திகள் வெளியாகவில்லையே? வாக்குச்சாவடிக்கு மக்களோடு மக்களாக வருவதுபோல, இவர்களும் வங்கிக்குச் செல்ல வேண்டும்தானே? செல்லாதது மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. யார் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பது என்றுதான் தெரியவில்லை.

- மா.கோவிந்தசாமி, தருமபுரி.



ஓவியங்கள் ஒளிரட்டும்

ஓவியர்களின் நிலை அதிர்வை ஏற்படுத்தியது, ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நலிவடைந்த ஓவியக் கலை’ (நவ.15) கட்டுரை படித்தபோது. ஒருகாலத்தில் உலகின் மற்ற நாடுகளைவிட ஓவியக் கலையைக் கொண்டாடியது நம் நாடு. பெரும்பாலான இந்து மக்கள் வழிபடும் கடவுள்களின் உருவங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா வரைந்ததே. ஓவியர்களின் வாழ்வு செம்மை அடைய அரசு நடவடிக்கை எடுத்தால் மீதமுள்ள ஓவியர்களின் வாழ்க்கையாவது மீள்வண்ணம் பூசியதுபோல் ஒளிரும்.

- சு.ராமமூர்த்தி, கன்னடியபாளையம்.



உத்தரவாதம் உண்டா?

ஆர்.ஷாஜஹான் எழுதிய, ‘வதையரசு’ (நவ.14) கட்டுரை சாமானியர்கள் படும் கஷ்டத்தைச் சொல்கிறது. கறுப்புப் பணத்தை மீட்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. சரியானதுதான்! ஆனால், போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் சாதாரண மக்களைப் பரிதவிக்கவிடுவது எந்த விதத்தில் நியாயம்? உயர்மதிப்பு கரன்ஸிகள் செல்லாது என்று அறிவித்து இன்றோடு 8 நாட்கள் ஆகிவிட்டன. முழுத் தேவைக்கும் பணம் கிடைத்தபாடில்லை. ஐம்பது நாட்கள் சிரமத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதமர். உள்நாட்டில் இருக்கும் அனைத்துக் கறுப்புப் பணமும் மீட்கப்பட்டு விடும் எனில், பொறுத்திருக்கத் தயார்!

- ரா.பொன்முத்தையா, தூத்துக்குடி.



அத்திப்பூ எழுத்தாளர்

கலை ஞாயிறு கட்டுரைகள் (நவ.13) சமகாலப் படைப்புகள் குறித்த ஆழமான இலக்கியக் கட்டுரைகளைத் தந்து வாசகர்களுக்கு இலக்கிய விருந்தினை அளித்துவருவது பாராட்டுக்குரியது. ‘கடல்புரத்தில்’, ‘ரெய்னீஸ் ஐயர் தெரு’ போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தமிழுக்குத் தந்த வண்ணநிலவன், புதுமைப்பித்தன் போல் தாமிரபரணி சார்ந்த எளிய மனிதர்களின் குரலை அரை நூற்றாண்டுக்கும் மேலாக அழுத்தமான படைப்புகளாகத் தந்துகொண்டிருப்பவர். ‘மிருகம்’ கதை அவரது நேர்த்தியான நடைச் சித்திரம். பரபரப்புக்கு எழுதுவதோ தொடர்ந்து எழுதுவதோ அவர் பழக்கம் இல்லை. அத்தி பூத்தாற்போல் எழுதினாலும் திடமான படைப்பைத் திறமாகத் தரமுடிவது அவரது தனித்தன்மை.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x