Published : 09 Nov 2016 10:25 AM Last Updated : 09 Nov 2016 10:25 AM
காந்தியின் மூத்த மகனின் மகன் அல்ல; மூன்றாவது மகனின் மகன் கனு!
மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தியின் மறைவுச் செய்தியில் (8.11.2016), அவர் காந்தியின் முதல் மகனான ராம்தாஸின் மகன் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சரியல்ல. காந்தியின் மூன்றாவது மகன்தான் ராம்தாஸ். காந்திக்கு நான்கு மகன்கள் - முறையே ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ். இவர்களில், ராம்தாஸ் - நிர்மலா தம்பதியருக்கு கனு காந்தி, சுமித்ரா, உஷா என்று மூன்று வாரிசுகள். காந்தியின் புகழ்பெற்ற படங்களில் ஒன்றான - தண்டி யாத்திரையின்போது அவரது தடியைப் பிடித்து முன்னே அழைத்துக்கொண்டு செல்லும் சிறுவன் இந்த கனு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- ரங்கநாதன், சென்னை.
சந்தை பயம்!
இயற்கை வேளாண்மை குறித்து சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நல்ல கட்டுரையாக ‘இயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா?’ (3.11.16) வந்துள்ளது. இதில் விவாதிப்பதற்கான கருத்துகள் ஏராளமாக உள்ளன. நம்பிக்கை இழந்து வரும் விவசாயிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிவது இயற்கை வேளாண்மை. இது விவசாயிகளின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்றாலும், ஓரளவேனும் கை கொடுக்கும். இயற்கை வேளாண்மை மீது சரியான புரிதல் ஏற்பட்டால்தான் இதனை மக்கள் ஆதரிப்பார்கள். முழுமையாக ஆதரித்தால்தான் இயற்கை வேளாண்மை வெற்றிபெறும். அதோடு, விவசாயிகளை சந்தையின் அச்சத்திலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும். விளைநிலங்களை உயிர்ப்பிக்கவும் விவசாயத்தில் நிலைப்படுத்தவும் ஒரு செயல்திட்டம் அவசியம். அத்தகைய செயல் திட்டத்தில் இயற்கை வேளாண்மை முக்கியப் பங்காற்றும்.
- கு.செந்தமிழ் செல்வன், வேலூர்.
எப்போது கிடைக்கும் பொறுமையும் புன்னகையும்?
பொறுமையும் புன்னகையான இயல்பும் ஆசிரியர்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. இதைத்தான் ‘புன்னகையும் பொறுமையும் என்ன விலை?’ கட்டுரையில் (4.11.16) அரவிந்தன் குறிப்பிட்டுள்ளார். இவற்றை ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களும் அவர் தம் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். எல்லா ஆசிரியர்களிடமும் இக்குறை இருப்பதில்லை. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்களிடம் இப்பண்புகள் குறைந்துவருகின்றன.
நான் சராசரிக்கும் குறைந்த மாணவன்தான். மற்ற மாணவர்களைவிட என்னுடைய புரிதல் தன்மை குறைவாகவே இருந்தது. ஆனால், என்னிடம் பொறுமையாகவும் புன்னகையோடும் இருந்தவர்கள், என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை தமயந்தி, தமிழாசிரியர் நித்தியானந்தம், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ச.சீ.இராஜகோபாலன். அவர்கள் மீது 40 வருடங்களைக் கடந்தும் கொண்டிருக்கும் மரியாதைக்குக் காரணம், அவர்கள் என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் மீது காட்டிய பொறுமையும் புன்னகையும்தான்.
முன்பெல்லாம் ஆசிரியர் பணிக்குச் செல்பவர்களுக்கு மற்றவர்களைவிடப் பொறுமையும் சேவை மனப்பான்மையும் அதிகம் இருக்கும். சேவைப் பணி என்பதைவிட சௌகரியம் நிறைந்த பணி என்பதால், அனைவரின் போட்டிக்குள்ளானது ஆசிரியர் பணி. சிலரிடம் அப்பணிக்கான பொறுமையும் சேவை மனப்பான்மையும் குறைந்துவருவது வருந்தத்தக்கதுதான். சிறந்த கல்வியும் சிறந்த ஆசிரியரும் கிடைக்க வேண்டுமெனில், மாற்றம் தேவையிருக்கிறது. அது எப்போது, எங்கிருந்து ஆரம்பிக்கும் என்பதுதான் தெரியவில்லை; பொறுமையுடன் காத்திருப்போம்!
WRITE A COMMENT