Published : 30 Nov 2016 09:51 AM
Last Updated : 30 Nov 2016 09:51 AM
கடந்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்குக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் ‘ஆன்லை’னில் டிக்கெட் முன்பதிவு செய்து, 92 பைசா பிரீமியம் செலுத்தும் பயணிகளுக்கு மட்டுமே ரயில் பயணத்தின்போது விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், கவுன்ட்டர்களில் நேரடியாக முன்பதிவு செய்து டிக்கெட் பெறும் பயணிகளுக்கு இந்த வசதி கிடையாது. அவர்களிடம் இக்காப்பீட்டுத் திட்டத்துக்கு பிரீமியமும் பெறுவதில்லை; விபத்து ஏற்பட்டால் இழப்பீடும் தருவதில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? கவுன்ட்டர்களில் நேரடியாக முன்பதிவு செய்து டிக்கெட் பெறும் பாமர அல்லது இணையதள வசதி இல்லாத பயணிகள் என்ன பாவம் செய்தார்கள்? வருகிற ரயில்வே பட்ஜெட்டிலாவது இக்குறையைக் களைய மத்திய அரசு முயற்சிக்குமா?
-ஆர்.வடமலைராஜ், சென்னை.
சமன் செய்யாத வாழ்க்கை
‘மண்டையில் இருக்கும் போலீஸைக் கீழே இறக்குவது எப்படி?’ (நவ.25) கட்டுரை, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இரு மனநிலைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு தனிமனிதரும் புத்தி, மனம் இரண்டையும் சமன் செய்தவாறு வாழ்வதற்கு நமது பண்டைய சமூக அமைப்புக்கள் கற்றுக்கொடுத்திருந்தன. மாறிய சூழலில் இன்றைய கல்வி ஒவ்வொரு மனிதருக்கும் பொருளாதாரத்தை நோக்கிய இலக்கு, அதற்கான திட்டங்கள், அதனை செயல்படுத்துகையில் எதிர்ப்படும் தடைகளைத் தாண்டுதல் / மீறுதல் ஆகியவற்றைக் கற்பிக்கிறது. அதனால் புத்தியை உபயோகித்து வாழ முயல்கின்றனர். மனம் சொல்வதைவிடவும் புத்தி சொல்வதையே கேட்கின்றனர்.
-ஏ.எம்.நூர்தீன், சோளிங்கர்.
வாராக்கடனை வசூலியுங்கள்!
பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியுள்ள கருத்துக்கள் (நவ.25) பொதுமக்களின் அச்சங்களை மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளன. சாமானிய மக்களை பெரிதும் அல்ல லுக்கு ஆட்படுத்தியுள்ள இந்த நடவடிக்கையால் நாளுக்கு நாள் மக்களின் சிரமங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுபவர்கள் அனைவரையும் கறுப்புப் பண ஆதரவாளர்களாக சித்தரிக்க முயல்வது பிரச்சினையைத் திசை திருப்பும் செயல். வங்கிகளில் இன்றைய தினம் ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் வாராக்கடன்கள் உள்ளன. அதுபற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நாட்டின் பொருளாதாரம் மேம்பட வாராக்கடன்களை வசூலிப்பதிலும், வேண்டுமென்றே வங்கிக்கடனைத் திரும்பச் செலுத்தாமல் உள்ள பெரு முதலாளிகள் மேல் நடவடிக்கை எடுப்பதிலும் அரசு முனைப்பு காட்டுமா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.
கோமலுக்கு அஞ்சலி
சமூகப் பிரச்சினையைப் பேசும் படைப்புகள் எப்போதும் பேசப்படும், எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதற்கு ஒரு உதாரணம் கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் (நவ.27 - கலை ஞாயிறு). அவருக்கு நினைவஞ்சலி செலுத்து வதற்காக அந்த நாடகத்தை அரங்கேற்றியிருப்பதும், நாடகம் பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பாக பால்நிலவன் கட்டுரை வெளியிடப்பட்டதும் பாராட்டுக்குரியவை. அதேபோல, காலம் கடந்த மக்கள் கவிஞனான ஃபைஸ் அஹமத்தை பெருமைப்படுத்தியுள்ளார் ந.வினோத்குமார். பாகிஸ்தானி என்று புறக்கணிக்காமல் ஓர் உலகக் கவிஞனாக உயர்த்திக் காட்டியிருப்பது சிறப்பு.
-பொன்.குமார், சேலம்.
கடைசியில ஒரு வரியைக் காணோம்!
நவ.29ம் தேதி ‘தி இந்து’வில் நான் எழுதிய கவிதை பிரசுரம் ஆனதில், ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கிடைத்த மகிழ்ச்சி! ஆனால், அதில் ஒரு நூறு செல்லாத நோட்டாகப் போனது போல் கவிதையின் கடைசி வரியைக் காணோம்... அந்தக் கடைசி வரி:
இருட்டுல நின்னுகிட்டு - பெரிசா
குருட்டுக் கணக்கு போடுறாங்க
வெளிச்சம் வந்தா வேஷம் கலையும்னு
விவரம் புரியாம ஆடுறாங்க!
- உஸ்மான், முகநூல் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT