Published : 26 Oct 2016 10:50 AM
Last Updated : 26 Oct 2016 10:50 AM

பயிற்றுவித்தல் எனும் கொள்ளை நோய்

அரவிந்தன் எழுதியுள்ள ‘தனியார் பள்ளிகள் எனும் அதிகார பீடங்கள்’ கட்டுரையைப் படித்தேன். தனியார் பள்ளிகளில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர் என்ற அடிப்படையில் எனது கருத்துகள் இவை. பயிற்றுவித்தல் (கோச்சிங்) தனி வகுப்புகளில் (கோச்சிங் சென்டர்களில்) செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால், வெறும் பயிற்றுவித்தலை நம்பியே பல தனியார் பள்ளிகள் இயங்குவது எதிர்கால சமுதாயத்தை ஆழ்ந்த அறிவற்ற ஒன்றாக மாற்றிவிடும்.

இப்படிப் பயிற்றுவித்தல் முறையில் வளர்க்கப்படும் மாணவர்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவோ, கூர்ந்தாய்வு செய்து அறிவியல் நிகழ்வுகளை ஆராயவோ திறனற்றவர்களாக இருப்பர். இவர்களைக் கொண்டு ஒரு நாடு எத்துறையில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்த இயலும்? பெருகிவரும் விஞ்ஞான யுகத்தில், மற்ற நாடுகளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தொடர்ந்து அவர்களின் சந்தைப் பொருட்களுக்கு நாம் அடிமையாகும் நிலையையே இத்தகைய கல்வி முறை உருவாக்கிவிடும் என்று அச்சமாக இருக்கிறது.

கல்வி என்பது வியாபாரப் போட்டிக்கான களம் அல்ல என்பதை தனியார் நிறுவனங்கள் உணர்ந்து செயல்படுமாயின், பயிற்றுவித்தல் எனும் கொள்ளைநோய் இச்சமூகத்திலிருந்து நீக்கப்பட்டு, ஆசிரியர் மற்றும் மாணவர் சக்தி மகத்தானதாகி இத்தேசத்தை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

- தி.காந்திமதிவேலன், திருநெல்வேலி.



வாசிப்புப் பண்பாடு

அக்டோபர் 22 அன்று வெளியான ‘பதிவர்கள் ஏன் சினிமா விமர்சனம் எழுதிக் குவிக்கிறார்கள்’ தலையங்கத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். சினிமா பற்றி எழுதிக் குவிக்கும் வலைப்பதிவர்கள், நூல்களைப் பற்றியும் எழுத முன்வர வேண்டும். நூல் அறிமுகம் என்பது கடும் உழைப்பை, வாசிப்பை வேண்டுகிற வேலை. இங்கு குழந்தைப் பருவம் தொட்டே வாசிப்புப் பண்பாடு வளர்த்தெடுக்கப்படவில்லை. காட்சி ஊடகங்களை அணுகுவதும் விமர்சிப்பதும் மிக எளிதாக அமைந்துவிடுகிறது. நான் படிக்கும் நூல்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகளை எனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

- மு.சிவகுருநாதன், திருவாரூர்.



ஜனாதிபதி வேட்பாளர்

புரட்சிகர வீராங்கனை லட்சுமி சாகல் பற்றிய குறிப்புகளை முத்துக்கள் பத்து பகுதியில் படித்ததில் மகிழ்ச்சி. முக்கியமாக, அவர் ஒரு இடதுசாரிச் சிந்தனையாளர் என்பதும், இடதுசாரிகள் சார்பாக குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் என்பதையும் கூடுதல் தகவலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- க.குருசாமி, கோவை.



காவிரியும் பாஜகவும்

காவிரிப் பிரச்சினையில், கர்நாடகத்தில் பாஜகவினர் மற்ற கட்சிகளுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தையும் மத்திய அரசையும் எதிர்த்துப் போராடிவருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவினர், காவிரிப் பிரச்சினைக்காக மற்ற கட்சிகளுடன் இணைவதும் இல்லை, போராடுவதும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் புறக்கணிக்கின்றனர். காரணம், இங்கே ஒற்றுமை கிடையாது. அப்புறம் எப்படி காவிரியில் நீர் வரும்?

- ஆர்.வடமலைராஜ், சென்னை.



சூரியக் குழந்தை

‘அறிவியல் அறிவோம்’ பகுதியில் வெளியான ‘சூரியன் குழந்தையாக இருந்தபோது’ என்ற விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனின் குறுங்கட்டுரை சிறப்பாக இருந்தது. மங்கலான வெளிச்சத்தைக் கொண்டு உயிரினங்கள் வாழ முடியுமா? பூமியில் முதன்முதலில் தோன்றிய உயிரினங்கள் எப்படி இருந்திருக்கும்? பூமி குழந்தையாக இருக்கும்போது எப்படி இருந்திருக்கும் என்பன போன்ற பல எண்ணங்களை மனதில் தோற்றுவித்து, என் அறிவியல் ஆர்வத்துக்கு வித்திட்டது.

- அ.ஜெயக்குமார், காளிபட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x