Published : 20 Oct 2016 10:32 AM
Last Updated : 20 Oct 2016 10:32 AM
நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பாடகரும், பாடல் ஆசிரியருமான பாப் டிலனை வாழ்த்திய தலையங்கம் கண்டேன். அவர், அமெரிக்கக் கவிஞர் டிலன் தாமஸ் மீதுள்ள ஈர்ப்பால் தன் பெயரை டிலன் என்று மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. டிலன் தாமஸ் அமெரிக்கக் கவிஞர் அல்ல; இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். டிலன் தாமஸ் இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் இருக்கும் ஸ்வான்சீ என்ற இடத்தில் பிறந்தவர். தன்னுடைய கவிதைகளின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம், ஆங்கில மொழியை மிகவும் வித்தியாசமாகக் கையாண்டவர்.
இவர் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கவிதைக்கு அழகையும், ஆவேசத்தையும் கொடுத்தன. மரணத்தைப் பற்றி அதிகம் பாடிய டிலன் தாமஸ் கவிதைகளில் இசை நயமும், காத்திரமான வார்த்தைகளும் காணக் கிடைக்கின்றன. இதனாலேயே அமெரிக்கப் பாடகர் பாப் டிலன், ஆங்கிலக் கவிஞர் டிலன் தாமஸ்பால் ஈர்க்கப்பட்டார். இருவரும் இசையையும் கவிதையையும் ஒன்றிணைத்து வெற்றி கண்டவர்கள்.
- பேரா.பெ.விஜயகுமார், கரிசல்குளம்.
மில்லரின் துன்ப நாடகம்
முத்துக்கள் பத்து பகுதியில், ஆர்தர் மில்லர் குறித்த பத்து குறிப்புகள் கண்டேன். வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களைக் கண்ட மில்லர், அதனையே தனது
60-க்கும் மேற்பட்ட நாடகங்களில் வெளிப்படுத்தினார். இன்னொரு முக்கிய விஷயம், 1956-ல் முதல் மனைவி மேரி ஸ்லாட்டரியை விட்டு, பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவை மணம்புரிந்து கொண்டார். இவரது வசனத்தில் பல படங்களில் மர்லின் நடித்துள்ளார். ஆனால், சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். 1962-ல் இன்ங் மொராத் என்ற புகைப்படக்காரரையும் மணந்தார். 2002-ல் மொராத் இறக்கும் வரை அவருடனேயே வாழ்ந்தார்.
- ந.ச.நடராசன், மேல்புதுப்பேட்டை.
வாசிப்பும் எழுத்தும்
எழுத வேண்டும் என ஆர்வத்துடன் உள்ள புதிய எழுத்தாளர்களுக்கு சுந்தர இராமசாமி, ‘இதுதான் வாசிக்கணும்னு இல்ல, இடைவிடாம ஏதாவது வாசிக்கணும்’, ‘தொடர்ச்சியா வாசிக்காத ஒருத்தன் நல்லா எழுதறான்னு சொன்னா, அதை நம்ப மாட்டேன்’ என அவர் சொன்ன அத்தனையும் நிஜம். வருங்கால எழுத்தாளர்கள், அவர் சொல்லியதைத் தாரக மந்திரமாக மனதில் பதிந்துகொள்ள வேண்டும். நிறையப் படித்துவிட்டுப் பிறகு எழுத வேண்டும்.
- சாமி குணசேகர், அம்மாசத்திரம்.
சண்முகம் செட்டியாரின் இன்றியமையாமை
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் நினைவுகூரப்பட்டது மகிழ்ச்சி. கோவை தொழில்நகரமாக மிளிர அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. புதிய பஞ்சாலைகள் தொடங்க அவரது ஆலோசனை இன்றியமை யாததாக இருந்தது. கொச்சி திவானாக இருந்தபோது தமிழகத் தொழிலதிபர்களைக் கொண்டு அங்கு தொழிற்சாலைகளை உருவாக்கினார். ‘வசந்தம்’ என்ற மாத இதழையும் வெளியிட்டார். எனது இளமைப் பருவத்தில் என் தந்தையோடு ‘ஹாவர்த்தன்’ என்று அழைக்கப் பெற்ற அவரது இல்லத்துக்குச் செல்லும் வாய்ப்பு பெற்றேன். மிகப் பெரிய நூலகத்தை உருவாக்கியிருந்தார். எல்லா நூல்களுக்கும் அட்டையிட்டு அழகாக வைத்திருப்பார். பல நூறு ஆய்வாளர்களுக்குப் பயன்தரத்தக்க அந்நூல்கள் என்ன ஆயின என்று தெரியவில்லை.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
ஊக்கமே முதல் தேவை
விளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள காரணங்கள் அனைத்தும் மறுக்க முடியாத உண்மைகள். அந்தந்த விளையாட்டு ஆணையங்களில், அந்தந்த விளையாட்டு தொடர்பான ஜாம்பவான்களே நியமிக்கப்பட வேண்டும். ஆணையங்களில் அரசின் தலையீடு அறவே கூடாது. அரசு தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும். இனிமேலாவது நம் அருகில் உள்ள வீரர்களை உள்ளன்போடு உற்சாகப்படுத்துவோம்.
- ரா.பொன்முத்தையா, தூத்துக்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT