Published : 31 Oct 2016 10:18 AM
Last Updated : 31 Oct 2016 10:18 AM
லா.ச.ரா.என்ற இலக்கிய ஆளுமையை அவரது மகனுடைய கட்டுரை வழியாக நினைவுகூர்ந்து உள்ளது சிறப்பு. லா.ச.ராவை ஒரு அதிமனிதராகக் கட்டமைக்க முயலாத இயல்பான எழுத்து, மெய்ப்புத் தன்மையின் வசீகரத்தைக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை பற்றிய லா.ச.ராவின் பார்வை அவரது எழுத்திலேயே வெளிப்படுகிறது என்றாலும் புனைவற்ற யதார்த்த மொழியில் கேட்பது அரிய அனுபவம் அல்லவா? "லாசராவின் மகன் என்பதைத் தவிர தனக்கு வேறு எந்தத் தகுதியும் இல்லை" என லா.ச.ரா.சப்தரிஷி தன்னடக்கத்தோடு கூறினாலும், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதை மெய்ப்பித்துள்ளார். தன் பிரியத்துக்குரிய தந்தையின் நினைவுகூரலில் துயரின் சாயல் படியாமல் புன்முறுவல் பூக்கும் வண்ணம் எழுயிருக்கிறார். எழுத்தையும் புகழையும் தவிர பிள்ளைகளுக்கு லா.ச.ரா. வேறு எந்தச் சொத்தையும் விட்டுச்செல்லவில்லை என்பதை மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் கூறி முடித்திருந்தாலும், அதை வாசித்தபோது ‘கொஞ்சமாக ரத்த நரம்பு பூத்ததுபோல்' கண்களில் ஈரம் கசிந்தது.
- நவஜீவன், ஸ்ரீ பெரும்புதூர்.
லா.ச.ரா. நூற்றாண்டு நினைவுக் கட்டுரையும், எழுத்தாளர்களின் நிலை பற்றிய தலையங்கமும், ‘தி இந்து’ (தமிழ்) என்றொரு பத்திரிகை தமிழகத்துக்கு எதற்கு என்ற கேள்விக்கான விடைகள்.
-எஸ்.கே.பி.கருணா, மின்னஞ்சல் வழியாக.
ஆரோக்கியமற்ற மோதல்
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் ஆரோக்கியமானதல்ல. நியமனம் குறித்த கோப்புகளை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது என்பதும், நீதிபதிகள் இல்லாத நீதிமன்றங்களை மூடிவிடலாமா எனத் தலைமை நீதிபதி வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதும் கவலை அளிக்கின்றன. இந்த மோதலும் முட்டுக்கட்டையும் முடிவடைய இருதரப்பும் கௌரவம் பார்க்காது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
-க.குருசாமி, கோவை.
வழிகாட்டும் கட்டுரை
நான் எப்படி புகைப்பதை நிறுத்தினேன் மிகவும் அருமையாக இருந்தது. தன் சொந்த அனுபவங்களையே, ஷாஜஹான் கோவையாகப் பகிர்ந்திருந்தார். சட்டங்களை விட தனி மனிதன் மன மாற்றமே இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்பது நூற்றுக்கு நூறு சரியே. புகைப் பழக்கத்தை நிறுத்த நினைப்போர்க்கும், முயற்சி செய்பவருக்கும் சரியான வழிகாட்டல் இந்தக் கட்டுரை.
-கி.ச. கல்யாணி, பாப்பிரெட்டிப்பட்டி.
கண் கலங்கினேன்
தொடர்ந்து ‘தி இந்து’ படிப்பவன் நான். 28.10.2016 இதழில் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய ‘உள்ளாட்சி உங்களுடைய உள்ளங்களின் ஆட்சி’ கட்டுரை படித்தேன். நேருவின் உணர்வுப்பூர் வமான உரையைப்படித்த ராஜீவ் காந்தி கண் கலங்கினாற்போல எனது கண்களும் அந்த நாளைக் காண ஏங்குகின்றன. மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.
-க.வெண்டஸ், கிறிஸ்தவ மத போதகர், புதுக்கோட்டை.
தங்க முதலாளி
தொழிலாளர்களை மாடு போல் வேலை வாங்கிக்கொண்டு உழைப்புக்கேற்ற ஊதியம் தராமல் ஏமாற்றும் முதலாளிகளுக்கிடையே, தன் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய, ஊழியர்களுக்காக தீபாவளி போனஸாக வீடும் காரும் கொடுத்து அசத்திய குஜராத் வைர வியாபாரியின் செயல் பாராட்டத் தக்கது. தனது நிறுவனத்தில் லாபத்தின் ஒரு பங்கை தன் தொழிலாளிகளுக்காகக் கொடுக்க எத்தனை முதலாளிகளுக்கு இப்படி மனம் வரும்?
-உ. சபாநாயகம், சிதம்பரம்.
உதவியும் ஊக்கமும்
பெங்களூருவைச் சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர், இந்த ஆண்டின் ஆசிய ஆணழகனாகத் தேர்வுசெய்யப் பட்டு, இந்தியர் அனைவரையும் பெருமை அடையச் செய்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிட மிருந்து பெறப்பட்ட நிதியிலேயே அயல்நாடுகளுக்குச் சென்று போட்டி களில் பங்கேற்றார் என்ற செய்திதான் வருத்தமளிப்பதாக உள்ளது. உலக அளவில் சாதிக்கத் துடிக்கும் ஏழை எளிய வீரர்களுக்கு அரசு உதவி செய்து ஊக்கமளிக்க வேண்டும்.
- உ.சபாநாயகம், சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT