Published : 06 Oct 2016 08:10 AM Last Updated : 06 Oct 2016 08:10 AM
முதல்வரின் குரல்
மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்த ‘ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?’ என்ற கேள்வியின் நியாயத்தைக் கட்டுரையாக ‘தி இந்து’ வரைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தக் குழப்பங்களுக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் ஒருவகையில் காரணம் என்பதை அன்றாடச் செய்திகள், மருத்துவ அறிக்கைகள் மூலம் அறிகிறோம். தமிழக ஆளுநர்கூட வார்டுவரை சென்றவர், நேரில் முதல்வரை சந்தித்துப் பேச முடிந்ததா? பழக் கூடையை யாரிடம் கொடுத்தார்? போன்ற ஐயத்துக்கு இடமளிக்கும் வகையில் ஓர் அறிக்கை தருகிறார்.
ஏற்கெனவே பல வதந்திகள் பரவும் சூழலில், தற்போது முதல்வரின் குரல் என்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் ஒன்று உலவுகிறது. மக்களின் சந்தேகங்களை அரசு போக்காவிட்டால், தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் கிளம்பி மக்களோடு அரசையும் குழப்பும்.
- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.
லால் பகதூரை மறந்துவிட்டீர்களே?
காந்தியடிகள் பிறந்த தினத்தன்று வெளியான கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருந்தன. காந்திக்கு இரண்டு பக்கம் முழுமையாக ஒதுக்கியதை வரவேற்கிறேன். ஆனால், இதே நாளில் பிறந்து, குறுகிய காலமே நாட்டின் பிரதமராக இருந்து, அந்தக் குறுகிய காலத்தில் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்று முழங்கி, வேளாண்மைக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, எதிரி நாட்டுக்கு நமது ராணுவ பலத்தைக்காட்டி, உள்நாட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கியவர் லால் பகதூர் சாஸ்திரி. அவரைப் பற்றி செய்தி இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது. ‘முத்துக்கள் -10’ பகுதியிலாவது அவரைப் பற்றிய தகவல்களைத் தந்திருக்கலாம்.
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
பாராட்டுக்குரிய நேர்காணல்
பாக்கெட் நாவல் பத்திரிகை மூலம் பரவலாகப் பேசப்பட்டவர் அசோகன். அப்போதிருந்த வாசிப்புப் பழக்கம், தொலைக்காட்சி வருகைக்குப் பிறகும் முகநூல் வருகைக்குப் பிறகும் கொஞ்சம் குறைந்துள்ளதை மறுக்க முடியாது. ஆனால், வாசிப்பு வேறு விதமாக உள்ளது. அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் அசோகன் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்கு உரியது.
- பொன்.குமார், சேலம்.
வரலாற்றுத் தவறு
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டுவிடும் என்று தமிழர்களும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் கருதுகின்றனர். ஆனால், எதற்குமே கட்டுப்படாத கர்நாடகத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் துளிகூட சட்டத்தை மதிக்கும் எண்ணம் இல்லை. இந்நிலையில், மேலாண்மை வாரியத்தின் பயன் எவ்வகையில் அமையும் என்பது மிகப்பெரிய கேள்வியாக முன் நிற்கிறது. மத்திய பாஜக அரசு இதிலும் அரசியல் செய்ய நினைப்பது, மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறாகிவிடும்.
WRITE A COMMENT