Published : 27 Oct 2016 09:37 AM
Last Updated : 27 Oct 2016 09:37 AM
இஸ்லாமியச் சட்டங்களில் பிறர் தலையீட்டுக்கான காரணங்களைச் சரியாகவே சல்மா விளக்கியுள்ளார். மதச் சுதந்திரம் வேறு, மனித உரிமை வேறு. இஸ்லாமிய தனிநபர் சட்டம் புனிதமானதாகவே இருக்கட்டும். ஆனால், மனித உரிமை மீறல்களைத் தனிநபர் சட்டம் திரையிட்டு மறைக்க முடியாது. பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், பெண்ணுக்குச் சொத்துரிமை, மறுமணம் போன்றவற்றில் இந்து மதத்தின் கட்டுப்பாடுகள் காலம் மாற மாறத் தளர்ந்துபோயின. அம்மாற்றங்களை மதபீடங்களால் தடுக்க முடியவில்லை. காரணம், அவை எல்லாமே மனித உரிமை மீறல்கள். அரசியல் நிர்ணய சட்டத்தை மீறும் தனிநபர் சட்டங்கள் மதச் சார்பற்ற நாட்டில் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.
- நா.வீரபாண்டியன், பட்டுக்கோட்டை.
துணிவு இருக்கிறதா காவல் துறைக்கு?
முதல்வர் குணமடைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும், திருவண்ணாமலையில் முதல்வர் குணமடைய பால்குடம் எடுத்த பெண் ஒருவர், நெரிசலில் சிக்கி உயிரிழந்தது நெஞ்சை உலுக்குகிறது. கட்சியினர், தங்களை முன் நிறுத்துவதற்காக வேண்டுதல் என்ற பெயரில் அப்பாவித் தொண்டர்களை, மக்களை வதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த முதலுதவி வசதியும் இல்லாமல் பால்குட விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும். முதல்வர் உடல் நிலை பற்றி தகவல் பரப்பியவர்களைத் தேடி உடனே கைது செய்யும் காவல் துறைக்கு, இப்பெண்ணின் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்யும் துணிவு இருக்கிறதா?
- பொன்விழி, அன்னூர்.
நேருவை இழிவுபடுத்துவதா?
சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் பற்றிய செய்தி படித்தேன். ‘அரசியல் வாரிசு யார்?’ என்ற பகுதியின் முதல் பத்தி இவ்வாறு ஆரம்பிக்கிறது - ‘வாரிசு அரசியல் இந்தியாவுக்குப் புதிதல்ல. நாட்டின் முதலாவது பிரதமர் நேரு முதல் இன்றைய அரசியல் தலைமுறை வரை கட்சி பேதமின்றி வாரிசுகள் வரிந்துகட்டி நிற்கிறார்கள். அந்த வரிசையில் சமாஜ்வாடி கட்சியில்...’ என்று செல்கிறது. நேருவின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட ஒரு அசாதாரண சூழ்நிலையில் (லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்) இந்திரா காந்தி அன்றைய காங்கிரஸ் தலைவரான காமராஜரால் முன்னிறுத்தப்பட்டார். நேரு, தனக்குப் பின் எந்த வாரிசையும் அறிவித்துச் செல்லவில்லை. காங்கிரஸில் குடும்ப அரசியல் நடப்பதை மறுக்க முடியாது என்றாலும், நேருவைப் பற்றிய வரிகள் சரியானதல்ல.
- விஷ்ணு, தூத்துக்குடி.
இருவருக்கும் சம பங்கு!
தனியார் பள்ளிகளில் பெற்றோர் மீது நடத்தப்படும் கொடுமையை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். மதிய உணவுக்கோ, பள்ளி முடிந்ததுமோ குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர் வளாக நுழைவாயிலைத் தாண்டி உள்ளே செல்ல முடியாது. நான் சென்ற பல நாடுகளிலும் பெற்றோர் வகுப்பறைக்குள் நுழையும் உரிமையைக் கண்டுள்ளேன். பள்ளி முதல்வரோடு சமநிலையில் அமர்ந்து பேசுவார்கள். இங்கு ஆண்டான் - அடிமை போலத்தான் ஆசிரியர் - பெற்றோர் உறவும் உள்ளது. இந்நிலை மாறி மாணவரின் கல்வியில் இருவருக்கும் சம பங்கு உள்ளது என்பதைப் பள்ளிகள் ஏற்க வேண்டும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
‘தனியார் பள்ளிகள் எனும் அதிகார பீடங்கள்’ கட்டுரை படித்தேன். தனியார் பள்ளிகளின் போக்கைத் துல்லியமாகச் சொல்கிறது கட்டுரை. பணம்படுத்தும் பாடு இது. பெற்றோர்கள் தனிச் சங்கம் வைத்து இதை எதிர்கொள்வதற்கு வழிமுறைகள் காணலாம்.
- வை.பூ.சோமசுந்தரம், கழுகுமலை.
பெருமைப்படுத்த வேண்டாமா?
கிரிக்கெட்டுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கபடி விளையாட்டுக்குத் தரப்படாதது, வருத்தமே. இந்திய கபடி அணியில் ஜொலித்த தஞ்சையின் தர்மராஜ் சேரலாதனை வரவேற்று, ஊக்கத் தொகை வழங்கி அரசு சிறப்பிக்க வேண்டும். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவரை நாம் பெருமைப்படுத்த வேண்டாமா?
- உ. சபாநாயகம், சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT