Published : 07 Oct 2016 09:26 AM
Last Updated : 07 Oct 2016 09:26 AM

வழி காட்டும் குருடம்பாளையம்

சுகாதாரமான கழிப்பறைகளுடன் கூடிய வகுப்பறைகள், இலவச வைஃபை வசதியுடன் கூடிய கணினி சேவை, குறுந்தகவல்களுடன் கிராம மக்கள் அனைவருடன் தினமும் தகவல் பரிமாற்றம், சோலார் ஒளி விளக்குகள் என உலகத்துக்கே வெளிச்சம் காட்டுகிறது, கோவை அருகே உள்ள குருடம்பாளையம் கிராமம். நல்ல ஊராட்சித் தலைமையைப் பெற்றால் நல்வாழ்வு கிட்டும் என்பதற்கு தலைவர் ரவி ஒரு சிறந்த உதாரணம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நல்லவர்களை இனங்கண்டு தேர்ந்தெடுக்க வழி காட்டும் குருடம்பாளையம் - அனைவருக்கும் ஒரு வெளிச்சம்பாளையம்!

- வீ.க.செல்வக்குமார், மின்னஞ்சல் வழியாக.

முதல்வரின் உடல் நலம்

முதல்வரின் உடல்நலம் குறித்த கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பொதுமக்களின் மன நிலையை அப்படியே எதிரொலிப்பதாக இருந்தது. முதல்வரின் அந்தரங்க எல்லைக்கு அப்பாற்பட்டு, அவரது நிலை குறித்து அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் நிச்சயம் உண்டு. மேலும், அவருக்கு முடியாத நிலையில், அதிகாரத்தைப் பிறர் துஷ்பிரயோகம் செய்யாத சூழலையும் உறுதிசெய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். பொதுமக்களின் கவலையைப் புரிந்துகொண்டு, அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்!

- இரா.பொன்னரசி, வேலூர்.

ரஜினி, கமலைப் பயன்படுத்தலாமே?

பசுமை கேரளா திட்டத்தின் தூதராக பாடகர் யேசுதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கேரளாவைப் பொறுத்தவரை இயற்கையை மதிக்கும் மாநிலமாகத்தான் காண முடிகிறது. கேரள நீராதாரங்களைக் காப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சியின் முத்தாய்ப்பாக, எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமான யேசுதாஸைப் பயன்படுத்துவதைப் போல், நம் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அல்லது கமல்ஹாசனைப் பயன்படுத்தி, ‘பசுமைத் தமிழகம்’ திட்டத்தைத் தொடங்கி இயற்கை வளங்களைக் காக்கலாமே?

- இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி.

போரின் விளைவுகள்

மிகச் சரியான நேரத்தில் காட்டப்பட்ட வழிகாட்டுதல் ‘ஏன் போர் எனும் சிந்தனையை நம் மூளையிலிருந்து நீக்க வேண்டும்?’ கட்டுரை. மத்திய அரசும் நம் மக்களும் முந்தைய போரின் விளைவுகளையும், நாம் இழந்தவற்றையும் எண்ணி, போர் என்பதை மறந்து சமாதானமாகச் செல்ல வேண்டும். ‘கோபத்தோடு எழுகிறவன், நஷ்டத்தோடு உட்காருகிறான்’என்பது படிப்பினை.

- சங்கர மகாதேவன், திருவைகுண்டம்.

மத்திய அரசின் தவறான அணுகுமுறை

அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டபோது மறுப்புத் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது அமைக்க மறுப்பது மத்திய அரசின் சந்தர்ப்பவாத அரசியலைக் காட்டுகிறது. சட்டப்படியும், நியாயப்படியும் காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு நடந்திருக்க வேண்டும். மலிவான அரசியல் ஆதாயத்துக்காக, மிகப்பெரிய மாண்பை மத்திய அரசு அழித்து ஒழித்துவிட்டது. இது ஒரு தவறான முன்னுதாரணமும்கூட. உச்ச நீதிமன்றம் தலையிட்டுத்தான் ஒவ்வொரு பிரச்னையும் தீர வேண்டும் என்றால், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான பிரதமரின் பொறுப்பும் கடமையும் வேறு என்னவாக இருக்க முடியும்?

- எஸ்.தணிகாசலம், கோபிசெட்டிபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x