Published : 12 Oct 2016 01:30 PM
Last Updated : 12 Oct 2016 01:30 PM

பொதுமக்களைப் பலிகடா ஆக்குவது நியாயமா?

ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ விகிதத்தைக் குறைத்ததைப் பாராட்டி தலையங்கம் வெளியாகியிருக்கிறது. சீக்கிரமே வங்கிகள் டெபாசிட் வட்டியைக் குறைத்துவிடும். அரசாங்கமே மக்களின் சேமிப்புப் பழக்கத்தைக் கைவிடச் செய்யும் வகையில் செயல்படுவதை நம் நாட்டில்தான் காண முடியும். இதுவரை ரெப்போ விகிதத்தைக் குறைத்து எவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளோம் என்று புள்ளிவிவரம் உண்டா? மல்லையா, அம்பானி, அதானி போன்றவர்களிடம் வங்கிகள் ஏமாந்ததுதான் மிச்சம். அரசு, நடுத்தர மற்றும் மூத்த குடிமக்களின் வயிற்றில் அடித்து, அவர்களை இன்னும் ஏழையாக்குவதற்காகத்தான் பாடுபடுகிறது. வங்கிகளின் ஊழல் மற்றும் கையாலாகாத்தனத்தினால் ஏற்பட்ட வாராக் கடனுக்கு, சேமிக்கும் பழக்கம் உள்ள பொதுமக்களைப் பலிகடா ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்? இதைத் தட்டிக் கேட்பதுடன், டெபாசிட் வட்டியை இனிமேலும் குறைக்கக் கூடாது என்று அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும்.



மலிவான அரசியல்

காவிரிப் பிரச்சினையில் தேசிய, மாநிலக் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்து எழுதப்பட்ட ‘சீன் போட்டது போதும்’ கட்டுரை மிகவும் முக்கியமானது. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசை நிர்ப்பந்திக்க முடியாது’ என்று கூறித் தன் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது மத்திய அரசு. கர்நாடகம் பக்கம் சாய்ந்திருப்பது மலிவான அரசியல் போக்கு. இனியாவது, அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.

- த.தினேஷ், கடலூர்.

காவிரி விவகாரத்தில், வழக்கு மேல் வழக்கு தொடுக்கும் தமிழகம் மற்றும் கர்நாடகமும் அதனூடே அரசியல் லாபம் பார்க்கும் மத்திய அரசின் அணுகுமுறையும் வியப்பின் உச்சம். எல்லாவற்றுக்கும் மேலாக, காவிரி விவகாரத்துக்காக கர்நாடக அரசு பல முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியபோதும், தமிழகம் ஒருமுறைகூட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ‘இமாலய வியப்பு’.

- நி.ஒஜிதுகான், முத்துப்பேட்டை.



இதுவல்லவோ ஊராட்சி!

குருடம்பாளையம்தான் உண்மையிலேயே காந்திஜி கனவு கண்ட கிராம ராஜ்ஜியத்துக்கான உதாரணம். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் மாநகராட்சிகள் செய்யும் வேலையை, ஊராட்சித் தலைவர் ரவி அரசாங்கத்தின் பண உதவிகள் இல்லாமலேயே மிகச் சிறப்பாகச் செய்துவருகிறார்.

- ந.பாலகிருஷ்ணன், ரத்தினபுரி.

ஊரின் பெயர் குருடம்பாளை யமாக இருப்பினும், ஊராட்சி நிர்வாகத்தின் விழிப்புணர்வும், செயல் பாடுகளும் விண்ணைத் தொட்டு நிற்கின்றன. இது போன்று ஒவ்வொரு கிராமமும் தமிழகத்தில் முன்னேற்றம் கண்டால் ஊழல் ஒழிந்து நாடு நலம் பெறும் என்பது உறுதி.

- சசிபாலன், மின்னஞ்சல் வழியாக…



புத்தகத் தலையங்கம்!

தலையங்கத்தில் ஈழப் பெண் புலி தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்ற நூல் குறித்த தங்களின் அருமையான விமர்சனம் கண்டேன். ஒரு புத்தகம் குறித்து தலையங்க அளவில் எழுதிச் சிறப்பித்த தமிழ் நாளேடு ‘தி இந்து’வாகத்தான் இருக்க முடியும். நூல்கள் குறித்து, ஏற்கெனவே நூல்வெளி பகுதியில் விரிவாக எழுதினாலும், ஒரு நூல் குறித்துத் தலையங்கம் எழுதுவது, வாசகர்களின் வாசிப்பு உணர்வு குறித்தான அக்கறையின் பால் ஏற்பட்டதாகும். இதுபோலவே புத்தகக் காட்சி எங்கு நடந்தாலும், அது குறித்த தங்களின் அன்றாட செய்திப் பக்கங்களும் நிறைவுதருவதாக இருக்கின்றன.

- கே.எஸ்.முகம்மத் ஷூஐப், காயல்பட்டினம்.



- ஏ.வி.நாகராஜன், புதுச்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x