Published : 05 Oct 2016 10:40 AM
Last Updated : 05 Oct 2016 10:40 AM

உள்ளங்களை ஆட்சிசெய்யும் தொடர்!

இளைஞர்களாகிய எங்களுக்கு மக்களிடம் உள்ளாட்சியின் அதிகாரம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு, நமது நாளிதழில் வெளிவரும், ‘உள்ளாட்சி… உங்கள் உள்ளங்களின் ஆட்சி’ தொடர் எங்களுக்குப் பேருதவியாக உள்ளது. வெறும் செய்தியாக இல்லாமல், உண்மைச் சம்பவங்களை எடுத்துரைப்பதால், தேர்தல் களத்தில் நிற்பவர்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்கிறது. குறிப்பாக, கிராம சபை பற்றிய தகவல்கள் எங்கள் பிரச்சாரத்துக்கு மேலும் பலம் தருகிறது. அதனை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டுக் கொடுத்துவருகிறோம். இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘தி இந்து’ நாளிதழ் மேன்மேலும் பரவட்டும் எல்லா தமிழரிடத்தும்.

- தங்கராஜ்.பா, திப்பணம்பட்டி கிராமம்.



நல்வாழ்வு வாழ்வதற்கான வழி

த.நீதிராஜன் எழுதிய ‘முதியோரைப் பாதுகாப்பது சமூகத்தின் கண்ணியம்' கட்டுரை கண்கலங்க வைத்தது. அனுபவங்களின் பெட்டகமான முதியவர்களை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளை மனிதப் பண்பு இல்லாதவர்களாகவே நினைக்கத் தோன்றுகிறது. முதியவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் படிக்கும்போது, நாம் நிச்சயம் தலைகுனியத்தான் வேண்டும். கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் சாரமான பத்துக் கட்டளைகளில் ஒன்று ‘உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்பது. பெற்றோர்களைப் பாதுகாப்பது சமூகத்தின் கண்ணியம் மட்டுமல்ல; நாம் நலமான வாழ்வு வாழ்வதற்கான வழியும்கூட. இதை மனதில் பதிப்போமானால், எந்தவொரு பெற்றோரும் வயதான முதியோர்களும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்.

-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.



நீதிமன்ற உத்தரவும் பெருந்தன்மையும்

நம் நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு பேசித் தீர்க்க முடியாத காவிரி நீர்ப் பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, விடிவுகாலம் தோன்றியிருக்கிறது. கூட்டாட்சி ஜனநாயகத் தத்துவத்தின்படி நடக்கும் இந்தியா போன்ற நாட்டில், ஒவ்வொரு மாநிலமும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். புரிந்துகொண்டு நல்லிணக்கத்துடன் உதவ முன் வர வேண்டும் என்று கூறியது சரியான நேரத்தில், சரியான நோக்கத்துக்காக வழங்கப்பட்ட தீர்ப்பாகும். கர்நாடக அரசியல்வாதிகளும் மக்களும் காழ்ப்புணர்ச்சிகளையும் பிரிவினைப் போக்குகளையும் ஒதுக்கிவிட்டுப் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

-ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.



இசைக்கு ஏது ஓய்வு?

மழலையின் குரல், குயிலின் கூவல், குழலின் ஓசை, வீணையின் நாதம் போல ஜானகியின் குரலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. பதிவுசெய்யப்பட்ட அவரது ஒவ்வொரு பாடலிலும் ஈர்ப்பு நிலைத்திருக்கும். நிசப்தமான இரவில் அவர் பாடல்களைக் கேட்டால் தூக்கம் நம் கண்களைத் தழுவும். அமைதி நம் நெஞ்சிலே நிலைக்கும். அப்படிப்பட்ட குரலுக்கு ஓய்வுகொடுப்பதென்பது மனதுக்குப் பெரும் வருத்தமாகவே இருக்கிறது.

- கேசவ் பல்ராம், பூங்கா நகர்.



ஆர்எஸ்எஸ்!

காந்தி ஜெயந்தி அன்று வெளியான ‘காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக’ கட்டுரை படித்தேன். ஆர்.விஜயசங்கர் ஆர்எஸ்எஸ் பற்றி தெளிவாக விளக்கி உள்ளார். ஆர்எஸ்எஸ் என்னதான் நாட்டுப்பற்று வேஷம் போட்டாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். சரியான தருணத்தில் உண்மையை விளக்கிய கட்டுரையாளருக்கு நன்றி.

- வாஹித் மாலிமார், பாண்டிச்சேரி.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x