Published : 25 Oct 2016 08:18 AM
Last Updated : 25 Oct 2016 08:18 AM

பெற்றோர்களின் கவனத்துக்கு…

இமையம் எழுதிய ‘எதற்காக இப்படி ஓடுகிறோம்’ கட்டுரை பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை நாம் எப்படி அலட்சியப்படுத்துகிறோம். அதனால் விளையும் கோர விளைவுகள் என்ன என்பதை மனதைத் தொடும் விதத்தில் கூறுகிறது. பெற்றோர்கள் படிக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளின் எதிர்காலம் மதிப்பெண்கள், தரவரிசை ஆகியவற்றில் மட்டுமே அடங்கியிருக்கிறது என்ற தவறான எண்ணத்துடன், அவர்களை ‘நல்ல பள்ளிகளில்’ படிக்க வைக்க விரும்பும் பெற்றோர், படிக்கும் பள்ளிகளில், சரியான கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

- தா.சாமுவேல் லாரன்ஸ், மதுரை.



மனதைத் தூர்வார வேண்டும்

காவிரியைப் பற்றிப் பேசும் தகுதி இருக்கிறதா என்ற கட்டுரை நிதர்சன உண்மை. உரிமையை மட்டும் கேட்டுவிட்டு, கடமையைச் செய்ய மறந்துவிடுகிறோம். மேட்டூர் அணையைத் தூர்வாரிப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஆற்று மணல் என்பது, நீரை உறிஞ்சி கோடைக் காலத்திலும் கொடுக்கும் நீர்க்கலம். அதை அளவின்றிச் கொள்ளையடித்துச் சுரண்டியதால், நீர் உறிஞ்சப்படாது வெள்ளமாக விரயமாகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்துக்குக் கிட்டத்தட்ட 900 டி.எம்.சி-க்கு மேல் கிடைக்கிறது. ஆனால், இதைச் சேமிக்கும் வசதி இல்லை. சிக்கனமும் நம்மிடம் இல்லை. ஆகவே, காவிரி நீரைப் பெற்று தரும் முன் நீர்நிலைகளைத் தூர்வாரி பரப்பளவையும் கொள்ளளவையும் அதிகப்படுத்த முன்வர வேண்டும். - - ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.



பள்ளிகளிலேயே இப்படியா?

அதிக மதிப்பெண் பெற்றதால், பிஹாரில் ஒரு தலித் மாணவன் சக மாணவர்களால் தாக்கப்பட்ட செய்தியைப் படித்தேன். அந்த வலி மிகுந்த துயரக் காட்சியை முகநூலிலும் பார்க்க நேர்ந்தது. தங்களோடு பயிலும் ஒரு சக மாணவனைச் சிலர் தாக்க, அதை சிலர் வீடியோ எடுத்து ஒளிபரப்பும் மனநிலையைத்தான் முதலில் கவனிக்க வேண்டியிருக்கிறது. இவர்கள் கற்ற கல்வி என்ன? இவர்கள் கற்றுக்கொண்ட ஒழுக்கம் என்ன? பண்பாடுகளைப் பதியம் போடும் பள்ளி நிலையிலேயே இவர்கள் இப்படி இருந்தால், வளர்ந்த பின் சமூகத்துக்கு இவர்கள் எவ்வகையில் பயன்படுவார்கள்? இவற்றையெல்லாம் பார்க்கும்போது மனம் பதறிப்போகிறது. - - கே.எஸ்.முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.



சுபமங்களாவின் நினைவுகள்

நாம் புரட்டுவது பக்கங்களை அல்ல, காலத்தின் சுவடுகளை என்ற உணர்வை சுபமங்களாவின் 59 இதழ்களும் இணைய சாட்சியாய்த் திகழ்ந்துகொண்டிருக்கின்றன. தொண்ணூறுகளில் தமிழ் இலக்கிய இயக்கமாக சுபமங்களா இதழ் இயங்கியது. கட்டற்ற இணையதளச் சுதந்திரம் ஏதுமற்ற காலத்தில், சுபமங்களா ஐந்தாண்டுகளில் முன்வைத்த இலக்கிய விமர்சனங்கள் இன்று இணைய ஆவணமாக அவரது மகள் தாரணியால் தமிழுக்குத் தரப்பட்டிருக்கின்றது. சுபமங்களா தமிழிலக்கியப் படைப்பாளிகளைக் கொண்டாடியது. அவர்களின் படைப்புகளைப் பரந்துபட்ட வாசகர்களிடம் கொண்டுசென்றது. - - சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.



‘உதாரண’ அமைச்சர்

தன்னுடைய மகளின் திருமண அழைப்பிதழுக்காக ரூ.2.25 கோடி செலவழித்திருப்பது, ஒரு அமைச்சர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்குச் சிறந்த உதாரணம். படித்துவிட்டுத் தூக்கிப்போடுகிற அந்த அழைப்பிதழுக்குச் செய்த செலவை அநாதை இல்லங்களுக்கு வழங்கியிருக்கலாம், ஏழைக் குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்திருக்கலாம். உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி, படுக்க இடமின்றி இருக்கும் ஏழைகளுக்கு உதவியிருந்தால்கூட மனதார வாழ்த்தி இருப்பார்கள். - - உ.சபாநாயகம், சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x