Published : 19 Oct 2016 10:18 AM
Last Updated : 19 Oct 2016 10:18 AM

ஒரு கோடிக் குழந்தைகள் சார்பாக நன்றி!

குழந்தைகளின் புத்தகப் பை சுமையை வெளிக்கொணர்ந்த ஆர்.கே.நாராயணனின் உரையினும் சாலச் சிறந்தது, இன்றைய ‘தி இந்து’வில் இமையம் எழுதியுள்ள ‘எதற்காக இப்படி ஓடுகிறோம்?’ என்கிற கட்டுரை. மாணவர்கள் உயிருள்ளவர்கள், உயிர்ராசிகளுக்குரிய நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டவர்கள் என்ற சிந்தனை இல்லாது செயல்படுகிறது நமது பள்ளி முறை. கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளது இன்றைய தலையாய பிரச்சினை. கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் படித்துப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியது கட்டாயம். ஒரு கோடிக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை மாவட்டத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவரது உடல் பரிசோதனைத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பில் இருந்தேன். இங்கிலாந்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய ஒப்புக்கொண்டார். நிறைய மாணவர்களுக்கு வயிற்றுப் புழு இருப்பதைக் கண்டு, வெளியில் சிறுநீர் கழிப்பதே அதற்கு ஒரு காரணமென்று கண்டார். பின்னர், கழிப்பிடம் இல்லாத பள்ளிகளுக்குக் கழிப்பிட வசதி செய்திட முயற்சிகள் மேற்கொண்டோம். பல மாணவர்க்கும் சிறுநீர் தொடர்பான பிரச்சினை இருப்பதற்குக் காரணம், நீண்ட நேரம் அடக்கி வைப்பதே என்றும் மாணவர் சிறுநீர் கழிக்க அனுமதி அளிக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தார். இது நடந்தது 1968 -70-களில்.

இங்கிலாந்து, ஒன்றுபட்ட சோவியத் ஒன்றியத்தில் ஆசிரியர் கல்வியின்போதே சிறப்பான மருத்துவக் குறிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி, மாணவர்கள் நலனில் அக்கறை காட்டுவதற்கு ஆசிரியர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.



அப்படித்தான் எழுதின

மறக்கப்பட்ட ஆளுமை: ஆர்.கே.சண்முகம் கட்டுரை படித்தேன். கட்டுரை முழுவதும் ஆர.கே.சண்முகம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆர்.கே. சண்முகம் செட்டியார் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். அன்றைய ஊடகங்கள் அனைத்தும் அப்படித்தான் எழுதின.

- மனோகரன், மேலூர்.



விபத்து தவிர்க்கும் வழிகள்

நீலாங்கரைக் கோயில் குளத்தில் நீராடிய மூன்று மாணவர்கள் குளத்தில் மூழ்கிப் பலியானது வேதனை தரும் நிகழ்வு. இப்போது இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. சமீபத்தில்கூட தாமிரபரணி ஆற்றில் குளித்த ஏழு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள். தமிழகத்தில் சாலை விபத்துக்களுக்கு நிகராக இப்படி நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகப்படியாக நடக்கின்றன.

‘தெரியாத ஊரும்... அறியாத ஆறும் ஆபத்து’ என்று தமிழில் ஒரு சொலவடையே உண்டு. என்னதான் நீச்சல் தெரிந்தாலும், புதிதான நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதையும் மீறிக் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், உள்ளூர் நபர்களின் பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், இது போன்ற சோக சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க இயலாது.

- கே.எஸ்.முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x