Published : 03 Oct 2016 08:59 AM Last Updated : 03 Oct 2016 08:59 AM
ரோஜா முத்தையா புழுதிபட விட்டாரா?
எஸ்.முத்தையா ‘மெட்ராஸ் அந்த மெட்ராஸ்’ தொடர் கட்டுரையில் “ரோஜா முத்தையா திரட்டிய நூல்கள் செட்டிநாட்டில் புழுதி படர்ந்து மிகச் சிலரால் மட்டும் படிக்கப்பட்ட நிலை மாறி...” என்று எழுதும்போது, மறைந்த ரோஜா முத்தையாவுக்குப் பெரும் அவமரியாதை செய்கிறார். ரோஜா முத்தையா தன்னிடம் இருந்த புத்தகங்களைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்தவர். எந்தப் புத்தகம், எந்த அறையில், எந்த அலமாரியில், எந்தத் தட்டில் இருந்தது என்பதுகூட அவருக்குத் துல்லியமாகத் தெரியும். புத்தகங்களுக்கு அட்டை போட்டு, பூச்சிகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்று, தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் பூச்சிக்கொல்லியெல்லாம் பயன்படுத்திப் பாதுகாத்தவர் அவர்.
‘மிகச் சிலரால் மட்டும்’ என்று குறிப்பிடுகிறார். எத்தனையோ ஆய்வாளர்கள் உலகெங்குமிருந்து ரோஜா முத்தையாவைத் தேடி, அவர் வீட்டுக்கு வந்து, அவர் சேகரித்துவைத்திருந்த நூல்களால் பயனடைந்திருக்கிறார்கள்! இன்னொரு தகவல்: 1994-ல் முகப்பேரில் ரோஜா முத்தையா நூலகம் அமைந்தது. 1998 மே மாதத்துக்குப் பின்னரே தியடோர் பாஸ்கரனுக்கும் நூலகத்துக்கும் நேரிடையான தொடர்பு ஏற்பட்டது. 1993-லிருந்து முகப்பேரில் நூலகம் அமையக் கடுமையாக உழைத்தவர்கள் மூவர் மட்டுமே - சிகாகோவிலிருந்து ஜேம்ஸ் நை, ரோஜா முத்தையா நூலகத்தின் முதல் இயக்குநர் ப.சங்கரலிங்கம், ‘மொழி அறக்கட்டளை’யின் அன்றைய செயலரான நான்.
- ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை.
உண்ணா நோன்பு அரசியல்
பழ.அதியமான் எழுதிய ‘தன்னை வருத்தும் ஆயுதம்’ எனும் கட்டுரை படித்தேன். காந்தியடிகள் மகாத்மா ஆனதற்கான அடிப்படைக் காரணம், அவர் மேற்கொண்ட வழிமுறைகளும் அதன் ஆளுமையும். அவர் எல்லாச் சூழலிலும் உண்ணா நோன்பைப் பயன்படுத்தவில்லை, அதிலும் பிளாக்மெயில் செய்யும் ஆயுதமாக அதை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. இன்று உண்ணாவிரதம் இருப்பவர்கள் இதை உணர்ந்து இருப்பார்களா... அவர்களுக்கே வெளிச்சம். காவிரியில் தண்ணீர் தரக் கூடாது என்பதற்குக்கூட உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தயவுசெய்து உண்ணா நோன்பை மலிவான அரசியலாக்காதீர்கள்.
- ப.தாணப்பன், திருநெல்வேலி.
ஈட்டியாய் குத்தும்
ஜானகி அம்மாவின் ஓய்வு அறிவிப்பு தந்த தாக்கத்தைச் சுமந்திருந்த வேளையில், அவரது சாதனைப் பட்டியலைத் தாங்கி வந்த ‘இளைப்பாறும் இசை’கட்டுரை சற்று மனதுக்கு ஆறுதல் அளித்தது. சலபதி ராவ் தொடங்கி காந்த் தேவா வரை நான்கு தலைமுறைக்கும் அதிகமாகப் பாடி அனைவர் மனதையும் ஆக்கிரமித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதபோது, அவர் பட்ட கோபம் நியாயமானதே. திரைத் துறையில் திறமைக்கு மதிப்பளிக்காமல் புறக்கணிக்கப்பட்டதில் முதலிடம் நடிகர் திலகத்துக்கு என்றால், அடுத்த இடம் ஜானகி அம்மாவுக்குத்தான். இவரைப் புறக்கணித்தவர்களுக்கு இவரது தேன்மதுரக் குரலே ஈட்டியாய் குத்தும் என்பது மட்டும் உண்மை.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
WRITE A COMMENT