Published : 17 Oct 2016 05:05 PM
Last Updated : 17 Oct 2016 05:05 PM
பஞ்சாயத்துத் தலைவி சுமதியின் புகழை வெளியுலகம் அறியச் செய்திருக்கிறது 'உள்ளாட்சித் தொடர்.' ஒரு மனிதன், உலகில் வாழ அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம். அவற்றைத் தனது பஞ்சாயத்தில் 100% சுகாதாரத்தோடு நிறைவேற்றிவிட்ட அவரது சாதனையில், தமிழகத்தோடு இந்தியாவும் தலை நிமிர்த்திக்கொள்கிறது.
பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தமிழகம் தவிக்கும்போது, நீங்கள் விடைபெறுகிறேன் என்றால் எப்படி? ஆதிக்கத்தூர் பொறுப்புதான் முடிகிறது. ஆனால், தமிழக மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகள் நிறைய இருக்கின்றன.
ஆதிக்கத்தூர் - சாமி குணசேகர், அம்மாசத்திரம்.
*
தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்!
நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றி நியூஸிலாந்து அணியைச் சூனியமாக்கியதுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கவும் உதவியிருக்கிறது.
அஸ்வினின் அபார சுழல்வீச்சும், கோலி, கம்பீர், சாகா, ஜடேஜா ஆகியோரின் பேட்டிங்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்தாலும், 13 விக்கெட்களைக் குவித்த அஸ்வின் ரவிச்சந்திரனின் பந்துவீச்சும் டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம். தொடரட்டும் இந்திய அணியின் வெற்றிப் பயணம்.
- ஆர்.பிச்சுமணி, தஞ்சை.
*
பழைய தமிழகமாக மாறுமா?
சிறந்த கல்வியாளர்களையும், அறிஞர்களையும் கொண்டிருந்த தமிழ்நாடு, இன்று போதைப் பாதையில் செல்வதை, 'போதை மேஜிக் காளான் ஆம்லெட்' கட்டுரை படித்தபோது புரிந்தது. ஆட்சியாளர்கள் என்றுமே இந்த ஆம்லெட் விஷயத்தைக் கண்டுகொள்ள மாட்டார்கள். பெற்றோரும், நல்ல நண்பர்களும்தான் அவர்களுக்கு நல்வழி காட்டித் திருத்த முயற்சிசெய்ய வேண்டும். காவல் துறை தயவுதாட்சண்யம் பார்க்காமல் போதைக் கும்பலை அடியோடு வேரறுத்து இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
*
ஏற்றத்தாழ்வு ஒழிந்திட காந்தியப் பொருளாதாரம் வேண்டும்
மிகவும் விவேகமாக எழுதப்பட்டிருக்கிறது, 'வேடிக்கை பார்க்கும் விவகாரம் அல்ல இது!' என்கிற தலையங்கம். சமதர்மச் சமுதாயம் ஏற்பட வேண்டியே, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வுரிமைக்காக இடஒதுக்கீடு உருவாகியது.
நம்முடைய முன்னோர்களின் பரந்த, பண்பட்ட நோக்கங்களின் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கும் மேட்டுக்குடியினரும், சாதிய அரசியலாளர்களும் மதச் சாயத்துக்கு மெருகூட்டி, எப்படியாவது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் படிநிலைகளை மீண்டும் ஏற்றத்தாழ்வுகளுடன் நிலைநாட்ட முயற்சித்துவருகின்றனரோ என்ற ஐயத்துக்கு வலுசேர்ப்பதுபோல அமைந்திருக்கிறது,
மராட்டிய மாநிலத்தில் நடந்திருக்கும் சம்பவம். ஒடுக்கப்பட்டோரின் மீட்சிக்குத் தீர்வாக, 'கிராமப்புறப் பொருளாதாரத்தின் எழுச்சிதான் அமையும்' என்ற தங்கள் கருத்து மிகவும் மெச்சத்தகுந்தது. அது காந்தியடிகளின் அடியொற்றி வாழ்ந்த அண்ணல் முனைவர்.ஜே.சி.குமரப்பாவின் 'காந்தியப் பொருளாதார'த்தின் மேன்மையை நினைவூட்டுகிறது.
- அழகன் கருப்பண்ணன், கோயம்புத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT