Published : 30 Sep 2016 10:28 AM
Last Updated : 30 Sep 2016 10:28 AM

செயல்படுவார்களா பெண்கள்?

பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு என்பது உண்மையிலேயே பெரிய சாதனைதான். இதற்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் பங்களித்த பெண்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் ரப்பர் ஸ்டாம்ப் போலவே பயன்படுத்தப்பட்டனர். இந்தத் தேர்தலிலும் அது தொடரக்கூடும். ஆண் மைய அரசியலுக்குத் துணைபோகாமல் பெண்கள் தனித்துச் செயல்பட ஆரம்பித்தால் நிச்சயம் நல்ல மாற்றம் நிகழும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமப் பஞ்சாயத்துகளில் பெயரளவுக்காவது பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மிகச் சாதாரண வேலைகள்கூட நடைபெறவில்லை. பெண்களாவது இவற்றை நிறைவேற்றுவார்களா?

- ஜெ.செல்வராஜ், வேடசந்தூர்.



விருதும் பெருமையும்

உலக அளவில் 20 நாடுகள் கலந்துகொண்டதில் ‘தி இந்து’வுக்கு ‘தெற்காசிய டிஜிட்டல் மீடியா’ விருது கிடைத்திருப்பது, வாசகராக எங்களைப் பெருமைப்பட வைக்கிறது. உண்மையில், தமிழகத் தேர்தல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்காக வழங்கப்பட்ட விருது மிகவும் பொருத்தமானது.

- சாமி குணசேகர், அம்மாசத்திரம்.



நீரில் கலந்த அரசியல்

பல நாடுகளுக்கிடையே ஓடும் நதி, எவ்விதப் பிரச்சினையும் இன்றி பங்கீடு செய்யப்பட்டு சுமுகமாகச் செல்கிறது. ஆனால், நம் அரசியல் வாதிகள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குச் செல்லும் நதியில் அரசியலைக் கலந்துவிட் டார்கள். குறிப்பாக தேசியக் கட்சிகள். தேசியக் கண்ணோட்டம் என்பது இவர்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆட்சி செய்ய வேண்டியவர்கள், அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்ல, சகல விவகாரங்களிலும் நீதிமன்றம் தலையிட்டுத்தான், முடிவு சொல்ல வேண்டிய சூழல் வரும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்களா?

- இரா.தீத்தாரப்பன், தென்காசி.



அறிவியல் கட்டுரை

விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிவரும் ‘அறிவியல் அறிவோம்’ பகுதி, எளிமையாகவும், சுவாரசிய மாகவும் இருக்கிறது. சமீபத்தில் வெளியான கட்டுரையின் வாயிலாக, கள்ளிச்செடி எப்படி வாழ்கிறது என்று தெரியவந்தது. அதனிடம் இயற்கையாக இருக்கிற உயிர்த் தொழில்நுட்பம் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது என்ற தகவலும் சிறப்பு.

- பேராசிரியர் அ.ஜெயக்குமார்,
மஹேந்திரா கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.



எல்ஐசியின் மகத்தான வளர்ச்சி

எல்ஐசியின் அசுர வளர்ச்சி பற்றிய கட்டுரையில் அதனுடைய விஸ்வரூபம் பற்றி அழகாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு ஆட்சியாளர்களுமே அந்நிய முதலீடுகளை இந்தியாவில் அனுமதிப்பதிலும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதிலும் ஒரே கொள்கைகளையே கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி, 24 காப்பீட்டு நிறுவனங்களின் போட்டியையும் சமாளித்துக்கொண்டு, புதுவணிகப் பாலிசிகளில் 76% என்ற சந்தைப் பங்களிப்பை அளித்து, எல்ஐசி நிகழ்த்தியுள்ள சாதனை சாதாரணமானதல்ல.

உலக அரங்கில் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் எல்ஐசி முதன்மையானதாகத் திகழ்வதும், இந்திய நாட்டின் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு இதுவரை எல்ஐசி ரூ.10,86,720 கோடி தந்திருப்பதும், மிகப்பெரும் சாதனை மட்டுமல்ல, பொதுத்துறை மூலம் எத்தகைய வளர்ச்சியையும், சாதனைகளையும் எட்ட முடியும் என்பதற்கு மிகச்சரியான முன்னுதாரணமும்கூட. இதை மத்தியில் ஆளும் அரசு புரிந்துகொண்டு செயல்பட வேண்டியதுதான் தற்போதைய முக்கியத் தேவை.

- எஸ்.தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர்,
கனரா வங்கி ஓய்வூதியர் சம்மேளனம்,
கோபிசெட்டிபாளையம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x