Published : 18 May 2016 11:42 AM
Last Updated : 18 May 2016 11:42 AM
சாதி, மதம், கல்வி, பொருளாதாரம் என வித்தியாசமும் இன்றி வயது வந்த அனைவருக்கும் சம வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் மேன்மையைச் சுட்டும் உன்னதச் செயல்பாடு. கற்றவர்- கல்லாதவர், கிராமம்- நகரம், விவரம் அறிந்தவர்- அறியாதவர் என எல்லோரும் ஒரே மாதிரி விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க முடிகிறதா என்றால் அதில் சிக்கல் இருக்கிறது. வேண்டும் என்றே தவறானவர்களை மக்கள் யாரும் தேர்வு செய்வதில்லை.
அந்தத் தேர்தலில் அவர் அறிந்து வைத்துள்ள அல்லது அவருக்கு அறிந்துகொள்ளக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் முடிவு எடுத்து வாக்களிக்கிறார். சமச்சீராகவோ, உள்ளது உள்ளபடியோ அரசியல் பொருளாதார விவரங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்காமையின் விளைவாகத் தனக்குத் தெரிந்த அளவு அல்லது தெரிவிக்கப்பட்ட அளவு விவரங்களை வைத்துக்கொண்டு முடிவு எடுக்கவேண்டிய நிலைக்கு வாக்காளர்கள் தள்ளப்படுகிறார்கள். அறியாமையில் பூத்துக் குலுங்கும் ஜனநாயகம் அரசியல்வாதிகளுக்குச் சவுகரியமாகத் தோன்றுகிறது. இந்த ஜனநாயக விரோதச் செயல்பாட்டைக் களைய ‘தி இந்து’ நாளிதழ் தன்னால் முடிந்தவரை போராடியது பாராட்டுக்குரியது.
தேர்தல் நேரத்தில் அது தொடர்பான நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள மட்டும் ஒரு ஊடகம் தேவை இல்லை. தனது சுய லாபத்துக்காக ஒரு அரசியலைத் தரித்துக்கொண்டு அதை நோக்கி மக்களைத் தள்ளும் ஊடகங்களும் மிகவும் ஆபத்தானவை. ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர் குழுவினரின் கட்டுரைகள், நேர்காணல்கள், இதர கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒருவகையில் ஜனநாயகப் பயிர் தழைக்க ஊற்றப்பட்ட நீர். போடப்பட்ட உரம். ஒரு தேர்தலில் உண்மையாக மக்களுக்கு உழைக்கும் கட்சி எவ்வளவு இதயச் சுத்தியோடு கடும் உழைப்பைச் செலுத்தி இருக்குமோ அதைக்காட்டிலும் அதிகமாக ‘தி இந்து’ நாளிதழ் உழைத்திருக்கிறது. ஜனநாயக விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்ட ஒட்டுமொத்த இந்துக் குழுமத்துக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
- பேரா.நா.மணி, ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT