Published : 11 May 2016 11:33 AM
Last Updated : 11 May 2016 11:33 AM

நுட்பங்களைப் பார்ப்பது எப்போது?

பிரியாணிப் பொட்டலங்கள், பிரம்மாண்ட மேடை, பெருங்கூச்சல், சாக்கு மூடைகளில் இலவசங்கள், கட்டுக் கட்டாய்க் கரன்ஸி நோட்டுகள் என்று காட்சிதரும் தேர்தலில், நுட்பத்திலும் நுட்பமாய் என் கண்முன்னே வருகிறார் சுகந்தி. இன்று சென்னை திரு.வி.க. நகர் தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர்.

1990-களில் இவர் அறிவொளித் தொண்டர். “என்னிடம் படித்த பெண்ணின் பேரு ‘போதும் பொண்ணு’. வீட்டில் அடுத்தும் பெண் பிறந்துவிடக் கூடாது என்பதற்காக அவருக்குப் போதும் பொண்ணு என்று பேர் வச்சிருக்காங்க. போதும் பொண்ணு அறிவொளியில் வைராக்கியத்தோடு படிச்சாங்க. அவுங்களுக்கும் பொண்ணுக பொறந்தாங்க. ஆனா, அவங்க வெச்ச பேரு என்ன தெரியுமா? அனிதா, கலைச்செல்வி. போதும் பொண்ணு கலைச்செல்வி ஆனதுதான் சார் மாற்றம்” என்றார். அறிவொளிக்குப் பிறகு மாதர் சங்கத்தில் இணைந்தார். அறிவொளியில் இருந்தபோது சுகந்தி - பிரியமான ஆதரவுக் கரம்; அதுவே மாதர் அமைப்பில் அச்சமின்றிப் போராடும் கையாக உயர்ந்தது.

சாதி ஆணவக் கொலைகள் மற்றும் மதுவால் மடிந்த ஆண்களின் மனைவிகளைத் தேடி உதவுவது என்று தொடர்ந்து உழைக்கும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து சொன்னேன் : “ஜெயித்து வாங்க சுகந்தி!” என்று. “ஜெயிப்பேன் சார். அது கடைசியில். இன்று ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு வருகிறேன்” என்றார் அவர். தேர்தல் களத்தைப் பாடசாலையாகப் பார்க்கும் வேட்பாளர் இவர்.

- ச.மாடசாமி, அறிவொளி இயக்க முன்னாள் ஒருங்கிணைப்பாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x