Published : 02 Jun 2022 06:43 AM
Last Updated : 02 Jun 2022 06:43 AM
நான் எழுதிய ‘இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம்’ (30.05.22) என்ற கட்டுரைக்கு, எழுத்தாளர் விழியன் எழுதிய எதிர்வினையைப் படித்தேன். கரோனா காலத்திய பிரச்சினைகள் குறித்து நான் எழுதியிருப்பதாகப் புரிந்துகொண்டுள்ளார். ஆசிரியர்களை மட்டுமே நான் குறைசொல்வதாகவும் சொல்கிறார். நான் அனுப்பிய கட்டுரையில் ‘ஆசிரியர் மேல் சுமத்தப்படும் பல வேற்றுப் பணிகளைத் தவிர்த்தல், பாடத்திட்டச் சுமையைக் குறைத்தல் போன்றவை அரசு செய்ய வேண்டியவை’ போன்ற சில வரிகள் விடுபட்டிருக்கின்றன.
என் கட்டுரை பல பத்தாண்டுகளாகத் தொடரும், உடைந்துவிட்ட பள்ளி-சமூக உறவு என்ற பிரச்சினை பற்றியது. நாற்பது-ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், பள்ளி இருக்கும் அதே கிராமத்தில் ஆசிரியர்கள் வாழ்ந்தபோது இருந்த ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் நெருங்கிய உறவு குறித்து நான் எழுதியதற்கு அதுதான் காரணம். பள்ளி என்பது மனிதத்தின் பிறப்பிடம், மனித உறவுகள் உருவாகும் இடம். ஆசிரியர் மாணவர் உறவு, சேவை வழங்குபவர்-சேவை பெறுபவர் (service provider – service consumer) உறவல்ல. இன்றைய அரசுப் பள்ளி ஆசிரியர் பணி ஏற்கும் களம், நம் சமுதாயத்தின் அனைத்துக் கொடுமைகளும் தாங்கொணா வறுமையும் சாதியமும் நிலைகொண்ட களம். வசதி படைத்த குழந்தைகளுக்கு வீட்டிலும் வெளியிலும் இருக்கும் ‘support system’ அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இல்லை. ஆகவே, அரசுப் பள்ளி ஆசிரியருக்குச் சில கூடுதல் பொறுப்புகள் உண்டு.
மனநல ஆலோசகர்களை நியமிப்பது மிகக் கடினம். வளரிளம் பருவத்துக் குழந்தைகள் தங்கள் ஆதங்கங்களைப் பகிர்ந்துகொள்ள கனிவும் பரிவும் கொண்ட, பொறுப்புடைய, மரியாதைக்குரிய ஒருவர் தேவை. அவர் ஆசிரியராகவே இருத்தல் நலம். பள்ளிகளுக்கென்றே ஒரு மாவட்டத்துக்குச் சில மனநல நிபுணர்களை அரசு நியமிக்கலாம்.
காலை இணை உணவு வழங்குவது பற்றி ஆசிரியர் ஜெயமேரி எழுதிய கட்டுரை (31.05.22) கண்கலங்க வைத்துவிட்டது. சகோதரியை வணங்குகிறேன்!
- வே.வசந்தி தேவி, மூத்த கல்வியாளார், சென்னை.
கட்டுரையின் லிங்க்: இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT