Published : 02 Apr 2016 11:15 AM
Last Updated : 02 Apr 2016 11:15 AM
ஆசை எழுதிய, ‘நம் கைகளில் குழந்தையின் ரத்தம்’ கட்டுரை படித்தேன். வரலாற்று இயங்கியலை விளங்கிக்கொள்ளும் ஒருவருக்கு அவற்றின் மூலத்தை ஓரளவு யூகிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. இனக் குழுக்கள் சாதிகளாகவும், இனக் குழுக்களின் தொகுப்பே மதமாகவும் சமூகத்தில் நிலைபெற்றிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆழ்ந்த வரலாற்றாய்வுகள் தேவையில்லை. துவக்கத்தில் நிறுவன மயமாக்கப்படாமல் இருந்த சாதிகளும், மதங்களும் காலப்போக்கில் நிறுவன வடிவம் பெறுகின்றன.
‘என் மதம் பெரிதா, உன் மதம் பெரிதா’ என்று அடித்துக்கொள்பவர்கள் நிச்சயம் மதத்தைப் புரிந்துகொண்டவர்களாக இருக்க முடியது. எந்த மதமும் வன்முறையையோ, கோபத்தையோ, உயிர்க் கொலையையோ ஒருபோதும் வலியுறுத்தியதில்லை. அப்படியிருக்க, மதங்கள் அதிகம் இருக்கும் நாட்டில் அமைதியும், சமதர்மமும்தானே நிலவியிருக்க வேண்டும். ஆனால், வன்முறையல்லவா வெறியாட்டம் போடுகிறது? மக்கள் கொத்துக் கொத்தாக சாகும்படியான வன்முறையை மதங்களின் பெயராலேயே கட்டவிழ்த்து விடுகின்றனர் மூடர்கள்.
குறிப்பாக, அந்த வன்முறை நிகழ்வுகளில் காரணம் தெரியாமல் பலியான பிஞ்சுகளின் எண்ணிக்கையே மிகமிக அதிகம். ஒரு மதத்தைக் காக்கிறேன் பேர்வழி என்று அதைச் சிறுமைப்படுத்தும் முயற்சி மேற்கொள்பவர்களை அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT