Published : 30 Apr 2016 11:15 AM
Last Updated : 30 Apr 2016 11:15 AM

அபகரிக்கப்படும் விளைநிலங்கள்

பெ.சண்முகம் எழுதிய ‘எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகள் எங்கே?’ கட்டுரை படித்தேன். இந்திய அரசு, வேளாண் துறையில் நிலச் சீர்திருத்தம் செய்ய மறுப்பதோடு, இருக்கின்ற நில உச்சவரம்புச் சட்டங்களையும் மீறிக் குழும விவசாயம் என்ற பெயரில், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் நிலக் குவியலுக்கு வழிவகை செய்துவிட்டது. தோட்டத் தொழில், பண்ணை விவசாயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், புது நகரங்கள் அமைத்தல் என விவசாயிகளின் செழுமையான விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வேளாண் விளைபொருட்களின் இறக்குமதிக்கான அளவுரீதியான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அகற்றப்பட்டதன் மூலம், ஏகாதிபத்திய நாடுகளில் ஏராளமாக மானியங்கள் பெற்று, அவர்களின் வேளாண் பொருட்கள் இந்தியச் சந்தையில் மலிவான விலைக்குக் கொட்டிக் குவிக்கப்படுகின்றன. மறுபுறம், இந்திய விவசாயிகளுக்கு அரசாங்கம் அளித்துவந்த மானியங்களை வெட்டியதால் வேளாண் இடுபொருட்களின் விலை உயர்ந்து, விவசாயம் சீரழிகிறது. இலவச மின்சாரத்தை ஒழிப்பது, அரசுக் கடன்களைக் குறைத்தல், நீர்ப்பாசனத் திட்டங்களைத் தனியாரிடம் ஒப்படைத்தல் மூலம் வேளாண் உற்பத்தியைச் சீரழித்தல் போன்ற புதிய காலனிய வேளாண் கொள்கைகளின் விளைவாக விவசாயம் நலிவடைந்துவருகிறது.

அதனால், விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோயினர். விவசாயிகள் நிலத்தை விட்டுக் குடிபெயரும் அவலம் தொடர்கிறது. எனவே, இந்திய அரசு பின்பற்றி வரும் புதிய காலனிய வேளாண் கொள்கைகளை முறியடிதால்தான் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

- மா.சேரலாதன், தருமபுரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x