Published : 23 Mar 2016 11:46 AM
Last Updated : 23 Mar 2016 11:46 AM
‘வரும் கல்வி ஆண்டிலிருந்து பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம்’ என்ற தலைப்பில் வெளியான தொழில்நுட்பக் கல்வி இயக்குநரின் பேட்டியைப் படித்தேன். ‘புதிய பாடத்திட்டத்தில், புதிய முயற்சியாக நூலக நேரமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், கருத்தரங்கப் பங்கேற்புத் திட்டம் காரணமாக மாணவர்கள் நூலகம் சென்று குறிப்புகள் தயாரித்துச் சொந்தமாக உரையாற்றுவார்கள்’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 41 அரசு பாலிடெக்னிக்குகளில் ஏறத்தாழ 35 பாலிடெக்னிக்குகளில் நூலகர்களே இல்லை. அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளிலும் இதே நிலைதான்.
நூலகர் இல்லாமையால் நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டே உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாகப் புதிய நூலகர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் பராமரிப்பின்றி பாழாகிக்கொண்டிருக்கின்றன. புதிய பாலிடெக்னிக்குகளில் புத்தகம் வாங்கி முதல்வர்கள் அறையிலேயே பத்திரமாக மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் வரும்போது மட்டும் நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டு பின் மூடப்பட்டு விடுகின்றன. திறக்காத நூலகத்தை ஏன் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்? இன்றைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அரசியல்வாதிகள் போலப் பேசத் துவங்கிவிட்டார்களோ என்று தோன்றுகிறது.
- செண்பகவள்ளி, ஆசிரியர், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT