Published : 16 Mar 2016 11:43 AM
Last Updated : 16 Mar 2016 11:43 AM
தமிழில் வெளியான நாள் முதல் சாதியத்துக்கும் சாதிய வன்முறைகளுக்கும் எதிரான வலுவான குரலாக ’தி இந்து’ ஒலித்துவருகிறது. உடுமலைப்பேட்டை சம்பவம் தொடர்பான செய்திகளும், கட்டுரையும் அதை எதிரொலித்தன. தலித்துகள் மீதான வன்முறை ஒரு சமூக அவமானம். வன்முறையாளர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள். சங்கர் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் தரப்பு சாதியைச் சேர்ந்தவள்தான் நான். ஆனால், இந்தச் சம்பவத்துக்காக வெட்கமும் வேதனையும் கொள்கிறேன்.
எல்லாச் சாதிகளிலுமே என்னைப் போன்றவர்களும் இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள். ஆகையினால், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தி எழுதும்போது அதைச் சரியான முறையிலேயே எடுத்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகளும் மக்களும் சாதியப் பிரச்சினைக்குப் போதிய முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கவில்லை என்றால், சாதியப் பிரச்சினைக்குப் போதிய இடம்கொடுக்காத ஊடகங்களின் அணுகுமுறையும் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ’தி இந்து’ அந்தச் சூழலை மாற்றிவருவது பெரிய ஆறுதல்.
- சாந்தி, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT