Published : 22 Feb 2016 09:46 AM
Last Updated : 22 Feb 2016 09:46 AM
உலகம் அதிசய, அபூர்வக் குறியீடுகளின் இயங்குதளம். குறியீட்டு மொழியில் நமக்கு ஏதோவொரு செய்தியை உணர்த்திக்கொண்டே இருக்கிறது இயற்கை. ஆனால், நாம்தான் பொருள் புரியாமல் பொருளற்ற வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று உம்பர்டோ ஈக்கோவை வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். இத்தாலிய நாவலாசிரியர் உலகின் புகழ்பெற்ற குறியீட்டியல் அறிஞர் உம்பர்டோ ஈக்கோவின் ‘ரோஜாவின் பெயர்’ நாவலைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவருக்கு ‘தி இந்து’ கலை ஞாயிறு இறுதி அஞ்சலி செய்திருப்பது மனநிறைவை அளிக்கிறது.
எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வதில் படைப்பின் சூட்சுமம் இல்லை. புதிர்போன்ற, விடுகதை போன்ற எதிர்பார்ப்பு மேடைகளில்தான் படைப்பிலக்கியம் உருவாக முடியும் என்று அவர் தன் எழுத்துகள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவினார். அவர் நிகழ்வின் உண்மையை அப்படமாகச் சொன்னதில்லை. வாசகனின் படைப்பு அனுபவமும் இணைந்தாலேயொழிய அவர் முன்வைக்கும் கருத்தியலை நம்மால் புரிந்துகொள்ள இயலாது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடைபெறும் விசித்திர விளையாட்டுகளை அவர் தன்னியல்போடு சொல்ல வந்ததைப் பலராலும் ஏற்க முடியவில்லை. அவர் நாவல்கள், வரலாறு குறித்த நம் கற்பிதங்களைத் தவிடுபொடியாக்கிவிடுகிறது. அவர் எழுதிய ‘புதியதொரு பூனையின் வரைவடிவம்’ கதை நாம் பார்த்த பூனையை வேறு நோக்கில் பார்க்கிறது.
வாழ்தலுக்கான போராட்டதில் ஒரு பூனை என்னவெல்லாம் செய்கிறது என்பதைக் கலைநோக்கோடு படைத்துக் காட்டுகிறார். மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள தொடர்பை அவரால் அழுத்தமாகச் சொல்ல முடிந்திருக்கிறது. வழக்கமாகச் சிறு பத்திரிகை உலகில் பேசப்படும் உம்பர்டோ ஈக்கோ போன்ற பெயர்களை விரிவாக ‘தி இந்து’ கலை ஞாயிறு பகுதியில் வெளியிட்டு அவர்களுக்குச் சிறப்புச் செய்வது மனதுக்கு நிறைவளிக்கிறது. இது மாறிவரும் வாசிப்பனுபவத்தைத் தெளிவாக உணர்த்துகிறது.
- முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT