Published : 18 Feb 2016 10:39 AM
Last Updated : 18 Feb 2016 10:39 AM

தேச சொத்துகளைக் காக்கும் முழக்கம்!

செய்தி ஏட்டின் வரலாற்றில், குறிப்பாக தமிழ் செய்தித்தாள் வரலாற்றில் முக்கிய மைல் கல்லை ஊன்றியிருக்கும் தமிழ் இந்துவுக்குப் பரவசமிக்க வாழ்த்துக்கள்! தேச சொத்துகளைக் காக்கும் போராட்டத்தில் தன்னை ஒரு நாளேடு இணைத்துக்கொள்வது ஒரு தேச பக்தக் கடமை என்றே நீங்கள் விவரித்திருக்கும் தலையங்கம் போற்றுதற்குரியது. ‘நம்பற்குரிய நம் வீரர் கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர்’ என்ற மகாகவியின் கனவுச் சொற்களின் நனவாக்கம் இது என்பதல்லால் வேறென்ன!

1998-ல் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் வாராக் கடன்கள் குறித்த விழிப்புணர்வுச் சுற்றுப் பயணம் ஒன்று நடத்தப்பட்டபோது, தெற்கே ராஜபாளையம் அருகே ஓர் ஊரில் ஏழை விதவைத் தாய், தனது மகன் பெற்ற கடனுக்காகக் கூலி வேலை செய்து கிராம வங்கிக் கடனை அடைத்துக்கொண்டிருப்பதாகச் சொன்ன நெகிழ்ச்சித் தகவலை மறக்க முடியாது. மிக எளிய மனிதர்கள் தங்களை வருத்திக்கொண்டாவது திரும்பச் செலுத்தும்போது, பெருந்தனக்காரர்கள் வங்கிக் கடனை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, அந்த வங்கிகளின் பங்குகளையே வாங்கி அதன்மீது ஆதிக்கம் செலுத்தவும் திட்டம் தீட்டும் ஆட்சியாளர்களை என்ன செய்வது?

உத்தரப் பிரதேசத்தில் 1991-ல், டல்லா, சூர்க், சுனார் உள்ளிட்ட இடங்களில் உள்ள பல நூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலக்கரிச் சுரங்கங்களை ஒரு கோடி ரூபாய் முன்பணமாகப் பெற்றுக்கொண்டு, குறைந்த தொகைக்கு டால்மியா நிறுவனத்துக்கு விற்ற முலாயம் சிங் அரசைக் கண்டித்த போராட்டத்தில், சுரங்கத் தொழிலாளர்கள், அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தேச பக்தர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சியில் பங்கு விற்பனைக்கு ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டார். மும்பை விமான நிலையத்தின் மதிப்பு மிக்க சென்டார் ஓட்டலை பாத்ரா நிறுவனம் 75 கோடிக்கு வாங்கி, சில மாதங்களில் 114 கோடிக்கு விற்றுவிட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இடதுசாரிகள் அரண்போல் நின்று காத்ததால்தான் விரும்பிய அளவுக்கு அரசு சொத்துக்களை விற்றுத் தள்ள முடியவில்லை. அந்த விற்பனையை இப்போது மோடி அரசு பெருமிதம் பொங்கச் செய்கிறது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி பகிரங்கமாகச் சொல்கிறார்.

மக்கள் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டின் வளத்தையே தாரை வார்க்கும் வேலையில் இறங்குவதை அனுமதிக்க முடியாது என்னும் குரலை எழுப்பும் தமிழ் இந்துவின் முழக்கத்தைப் பல லட்சம் வாசகர்கள் வீடு தோறும் கொண்டு சேர்ப்பார்கள்.

- எஸ்.வி. வேணுகோபாலன், சென்னை-24.



‘மக்கள் சொத்துகளைக் காப்போம்’ என்ற கட்டுரை படித்தேன் இந்திய விடுதலைப் போராட்டத்தை வழி நடத்திய மகத்தான தலைவர் களுக்கு ஒரு கனவு இருந்தது. சுதந்திர இந்தியாவை அனைவருக் குமான இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதே அந்தக் கனவு. அந்தக் கனவை நனவாக்க உருவாக் கப்பட்டதுதான் பொதுத்துறைகள். 1956-க்குப் பிறகு, நிதித் துறையிலும் உள்கட்டமைப்புத் துறையிலும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு பொதுத்துறைகள் உருவாக்கப்பட்டன.

அதில் ஒன்றுதான் எல்.ஐ.சி. 1956-ல் 5 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி.யின் இன்றைய சொத்து மதிப்பு 20 லட்சம் கோடிகள். மக்களின் வரிப் பணத்தாலும் சேமிப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகக் களம் கண்டிருக்கும் ‘தி இந்து’வின் முயற்சி பாராட்டுக்குரியது. மக்களின் பொதுத்துறைகளைக் காப்போம்… அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவோம்!

- இரா. தர்மலிங்கம், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x