Published : 09 Feb 2016 11:04 AM
Last Updated : 09 Feb 2016 11:04 AM
துணை வேந்தர் பதவிகள் மேலும் மேலும் அரசியல் சார்பு, சாதிச் சார்பு எனப் பயணித்துவரும் இன்றைய வேளையில், மேலும் ஒரு நீண்ட நெடிய அநீதியைக் கட்டுரை சுட்டுகிறது. சமீப காலம் வரை துணை வேந்தர் பணியிடத்துக்கு எந்தவிதக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியும் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இதற்குக் காரணம், எந்தவிதத் தகுதியும் தேவையில்லை என்பது அல்ல. உயர் கல்வியின் உயர்ந்த பதவிக்கு எந்தப் பகுதியில் நிபுணர்கள் இருந்தாலும் அடையாளம் கண்டு தேர்வுசெய்ய வேண்டும் என்பதே. இந்த அளவுகோல் பொய்யான பிறகுதான் பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளை உருவாக்கியது.
ஆனால், அதிலும் சிக்கல். தமிழ்நாட்டில் இருக்கும் எந்த வகைக் கல்லூரி யில் பணியாற்றும் பேராசிரியரும் துணை வேந்தர் பதவிக்கு வர முடியாது. காரணம், கல்லூரிகளில் பணிக் காலம் முழுவதும் ஒருவர் உதவிப் பேராசிரியர் அல்லது இணைப் பேராசிரியர் என்ற நிலையில் மட்டுமே பணியாற்ற முடியும். பேராசிரியர் என்ற அந்தஸ்தில் பணியாற்ற முடியாது. அதுமட்டுமல்லாமல், நீதிபதி ராமசுப்ரமணியன் ‘நமது யுஜிசி விதிகளின்படி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட துணை வேந்தர் ஆக முடியாது’ என்று தற்போதைய யுஜிசி வழிமுறைகளின் பலவீனத்தைக் கல்யாணி மதிவாணன் தீர்ப்பிலேயே சுட்டிக்காட்டி உள்ளார். இவைதவிர, ஜே.பாலசுப்ரமணியன் சுட்டிக் காட்டியுள்ள பிரச்சினை மிக முக்கியமானது.
இதுவரை நியமிக்கப்பட்ட 150 துணை வேந்தர்களில் 6 பேர் மட்டுமே தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது, அச்சமூகத்துக்கு உயர் கல்வித் துறை அளித்திருக்கும் பெரிய தீங்கு! இதையும் தீண்டாமைக் கொடுமையின் வடிவமாகவே கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குப் பல்கலைக்கழக உயர் பதவிகளில் உரிய பிரதிநித்துவம் கிட்ட வேண்டும் என்றால், இப்பதவிகளுக்குச் சுழற்சி முறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதே தக்கதொரு தீர்வாக இருக்கும்.
- பேராசிரியர் நா.மணி, ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT