Published : 06 Feb 2016 12:54 PM
Last Updated : 06 Feb 2016 12:54 PM

உறவுகள் முக்கியம் இல்லையா?

ஒவ்வொரு இஸ்லாமியரும் படித்து உணர வேண்டியது ‘இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?’ கட்டுரை. கட்டுரையாளர் சொன்ன கருத்துகள் அனைத்தும் முகத்தில் அறையும் உண்மைகள். இந்த வஹாபிகளிடம் காணப்படும் ஒற்றைத்தன்மை பல இன்னல்களை இஸ்லாமிய சமூகத்திடம் கொண்டுவந்துவிட்டது. மனித உறவுகளைக்கூட ஒதுக்கிவிட்டு என்ன செய்யப்போகிறார்கள் என்று புரியவில்லை. இன்ஷா அல்லாஹ் இது களையப் பட வேண்டும்.

- முஹம்மது மீரா, மின்னஞ்சல் மூலம்.



எங்களுக்குத் தெளிவு இருக்கிறது!

தவ்ஹீத் தொடர்பான கட்டுரை, ஒரு குழப்பவாதியாகவே கட்டுரையாளரைக் காட்டுகிறது. இஸ்லாம் என்றால் திருக்குர்ஆனும், முஹம்மது நபியின் வழிகாட்டுதலும் மட்டும்தான் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். சவுதி உள்ளிட்ட எந்த நாடும், எந்த மனிதரும் இஸ்லாத்தின் முன்மாதிரியோ, பிரதிநிதியோ இல்லை என்பதிலும் தெளிவாகவே இருக்கிறோம். ‘ஷிர்க்’ மாநாட்டை நடத்திய அமைப்புதான் பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்யும் அமைப்பும் என்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

- அபுல் காசிம், மின்னஞ்சல் வழியாக.



சட்டம் தேவையில்லை

பயங்கரவாதத்தை ஒடுக்கச் சட்டம் கொண்டுவரத் தேவை இல்லை. ஏற்கெனவே பல முறை சட்டங்கள் கொண்டு வந்தாயிற்று. அதனால் பலன் எதுவுமில்லை. சட்டங்கள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும்தான் அதன் வெற்றி இருக்கிறது. சட்டங்கள் இயற்றுவதை விட்டுவிட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறையின் மூலமே பயங்கரவாதத்தை ஒடுக்கலாம், தடுக்கலாம்.

- பொன்.குமார், சேலம்.



முஸ்லிம்களின் மனசாட்சி

முஸ்லிம் வெகுஜன மக்களின் மனசாட்சியை அப்படியே பிரதிபலித்திருக்கிறது ‘தி இந்து’. வஹாபிஸம் தொடர்பான கட்டுரை, இது தொடர்பாக மேலோட்டமாகப் பேசிவந்த பலரிடமும் ஆழமான புரிதலை ஏற்படுத்தும். 18-ம் நூற்றாண்டில் அரேபியாவில் தோன்றிய வஹாபிஸம், 1980-களுக்குப் பிறகு தமிழகத்தில் பரவியதில், அரபு நாட்டுக்கு வேலைக்காகச் சென்றவர்கள் சிலருக்கும் மதீனா பல்கலையில் படிக்கச் சென்றவர்கள் சிலருக்கும் பங்குண்டு. ஸலாஃபிகள், வஹ்ஹாபிகளால் தமிழக முஸ்லிம்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் ஏராளம்.

இயக்கப் பின்புலத்தில் இயங்குபவர்கள் வேண்டுமென்றால், ‘தி இந்து’ கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். ஆனால், அதுதான் முஸ்லிம் வெகுஜன மக்களின் மனசாட்சியின் குரல். முஸ்லிம்கள் மீது உண்மையான அக்கறையுடன் முன்வைக்கப்படும் இப்படியான விமர்சனங்களையும் குறை சொல்லிவிட்டு நகர்ந்துகொள்வது, சமுதாயத்தின் நலனுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல.

- எம். அபுல்ஹசன், பாளையங்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x