Published : 23 Feb 2016 09:59 AM
Last Updated : 23 Feb 2016 09:59 AM

தியாகத்தின் உருவம் லட்சுமண அய்யர்

லட்சுமண அய்யருடைய பிறந்த நாளை அவருடைய சொந்த ஊர்க்காரர்களான நாங்கள் மறந்துவிட்டோம். ‘தி இந்து’ நாளிதழ் நினைவூட்டிவிட்டது. ஆரம்பத்தில் அவரைச் சுதந்திரப் போராட்டத் தியாகி எனும் அளவில்தான் எங்களுக்குத் தெரியும். பல ஆண்டுகளுக்குப் பிறகே அவரின் பூமிதான இயக்கப் பணிகள் பற்றியும், மலத்தை மனிதர்கள் அள்ளுவதைத் தடை செய்த துணிச்சல் பற்றியும், தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்காகச் சிறப்புப் பள்ளி நடத்தும் மனிதநேயம் பற்றியும் தெரிந்து கொண்டேன். அவரைப் பற்றிய நீளமான நேர்காணலும் ஆவணப்படமும் வெளியாகியுள்ளன.

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.



முன்னாள் நீதிபதி சந்துருவின் ‘லட்சுமண அய்யர் எனும் சாதி ஒழிப்புப் போராளி’ கட்டுரை படித்தேன். இன்றைய காலத்துக்குத் தேவையான கட்டுரை. தலித் மக்கள் விடுதலை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகங்களின் நிகழ்வுகள் இதனையே காட்டுகின்றன.

- தி. சீனிவாசன், தூத்துக்குடி.



சாதியை ஒழிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் சாதி வேற்றுமை பற்றிய எண்ணங்களைத் தகுந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் மூலம் போக்க முடியும். அதற்கு உதாரணம் லட்சுமண அய்யரைப் பற்றி நீதிபதி சந்துரு எழுதிய கட்டுரை. ராமானுஜர் பற்றி நீதிபதி சந்துரு குறிப்பிடுகிறார். ராமானுஜர் சாதியை அழிக்கவில்லை. சாதி வேற்றுமையை அழிக்கவே பாடுபட்டார். ஆனால் அவரை ஒரு சமயவாதியாக மட்டுமே பார்க்கிறோம். அவரைப் பற்றிய முழுமையான பார்வை நம்மிடம் இல்லை. கட்டுரையில் ராமானுஜர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமானுஜர் ஆழ்வார் அல்ல, வைணவ ஆச்சாரியர்.

- எஸ். கோகுலாசாரி, புவனகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x