Published : 25 Feb 2016 10:43 AM
Last Updated : 25 Feb 2016 10:43 AM

நடுநிலை வாக்குகளைக் கவர...

ஜனநாயகத் திருவிழாவில் முதல்வர் வேட்பாளராக தோழர் நல்லகண்ணுவை முன்னிறுத்தி கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு யதார்த்தம். அதே சமயம், தற்போது இந்திய கம்யூ னிஸ்ட் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணியில், தோழர் நல்ல கண்ணுவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவே அவர்களுக்குள் கருத்தொற்றுமை வருமா என்ற சந்தேகம் நடுநிலையாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது. அவர்கள் இந்த முடிவில் திடமாக இருந்தால்தானே வாக்காளர்களையும் நம்ப வைக்க முடியும்?

- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.



முதல்வர் வேட்பாளர் குறித்த கட்டுரை கூர்மையான சிந்தனையோடு எழுதப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் இதுவரை ‘எரியிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி’ என்ற சலிப்புடனேயே வாக்களித்துவந்துள்ளனர். இப்போதுதான் மக்கள்நலம் மிகுதியாகப் பேசப்படுகிறது. இந்த வாய்ப்பை மக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யாருக்கு யார் வாக்களித்தார் என்று எந்தத் தனிநபரையும் கண்டறிய இயலாதவண்ணம் நல்ல வாய்ப்பை ஜனநாயகம் வழங்கியுள்ளது. இதைப் பயன்படுத்திக்கூட தன்னையும் நாட்டையும் பாதுகாத்துக் கொள்ளவில்லையென்றால் எந்தக் கடவுளும் நிச்சயம் காப்பாற்ற மாட்டார் என்பது சத்தியம்.

- முனைவர் சு.மாதவன். புதுக்கோட்டை



குழப்பச் சூழல்

செவ்வாய் அன்று வெளியான ‘வாக்குகள் சிதறினால் நிச்சய வெற்றி: ஜெயலலிதாவின் கணிப்பு பலிக்குமா?’ என்ற செய்தியைப் படித்தேன். மக்களுக்குத் திமுக மீது இருந்த கோபம்தான் 2011 தேர்தலில் அவரை மாபெரும் வெற்றி பெறச்செய்தது. அந்த வெற்றியைத் தக்கவைக்க இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் மிகச் சுமாராகப் பணியாற்றி இருந்தால்கூட அதிமுக சுலபமாக வெல்ல முடியும். ஆனால், அப்படி நடக்கவில்லை என்றே தோன்றுகிறது. அதேசமயம் எதிர்க்கட்சிகள் உதிரிகளாகச் சிதறியிருக்கும் சூழலில் எதையும் உறுதியாகக் கணித்துவிட முடியாது.

- ராகுல், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x