Published : 13 Feb 2016 10:55 AM
Last Updated : 13 Feb 2016 10:55 AM
இந்து என்கிற சொல் எமக்கு அச்சத்தைக் கொடுத்ததால், இந்து ஆங்கில நாளிதழைக்கூட வாசிக்க மறுத்தேன். இந்து படியுங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் என்று எனது நண்பர்கள் வலியுறுத்தியபோதுகூட அதை வாசிக்க மறுத்தேன். பிறகு, எப்போதாவது வாசிக்கத் தொடங்கினேன். ஆங்கிலம் புரியாதபோது அது இந்துத்துவத்துக்கு ஆதரவானது என்கிற தவறான எண்ணம் எனக்குள் இருந்தது.
‘தமிழ் இந்து' எல்லாவற்றையும் மாற்றியது. என்னுடைய அரசியல் சமூகம் சார்ந்த பணிகள் விரிவடைந்தபோது, விளிம்பு நிலை மக்களின் உண்மையான பிரச்சினைகளைக் கண்டுணர்ந்தபோது என் எண்ணம் மாறியது. ஏனெனில், எத்தனையோ நாளிதழ்களை வாசித்துவரும் வேளையில் தமிழில் விரிவான பல கட்டுரைகளுக்கான களம் வெற்றிடமாகவே இருந்தது. அந்த வெற்றிடத்தை
‘தமிழ் இந்து' நிறைவு செய்ததே. செய்தித்தாள் என்பது வெறும் செய்திகளை மட்டும் தந்தால் போதும் என்கிற நிலையிலிருந்து மாறுபட்டு, மனிதகுல வாழ்வியலுக்கு ஏற்ற பல கட்டுரைகளை வண்ணப் படங்களுடன் கொடுத்து, அக்கட்டுரைகளைப் படிக்கத் தூண்டுவது வாசிப்பின் பழக்கத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. பல நடுப்பக்கக் கட்டுரைகள் மறுவாசிப்பு செய்யத் தூண்டுகின்றன. இணைப்பிதழ்களின் தனித்துவம், வீடு தேடி வரும் நூல் அறிமுகம், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். என்னை மட்டுமல்ல இரண்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் தொல்காப்பியனையும் மாயாபஜாரில் குதூகலிக்கவைத்திருக்கிறது ‘தி இந்து’. பல தலைமுறைகளைத் தாண்டி தழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் ‘தி இந்து’ தமிழ்.
- கு.கா. பாவலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT