Published : 11 Feb 2016 07:40 AM Last Updated : 11 Feb 2016 07:40 AM
மாதரை இழிவு செய்யும் மடமை!
சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்த செய்தியைப் படித்தேன். உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது தேவஸ்வம் போர்டுக்காக வாதாடிய வழக்கறிஞரின் வாதம் நகைப்புக்குரியதாக இருக்கிறது.
அவர் வாதிடும்போது, “அய்யப்பன் சிலை தியான நிலையில் உள்ளது போல் அமைந்துள்ளது. மாத விலக்குள்ள பெண்கள் கோயிலுக்கு வந்தால் அது சாமியைத் தொந்தரவு செய்வதாக இருக்கும் என்பதால்தான் பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை” என்று கூறியுள்ளார். இதைவிட அய்யப்பனை அவமதிக்கும் செயல் இருக்கவே முடியாது. மேலும், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளான 1. சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு 14), 2. மத வழிபாட்டு உரிமை (பிரிவு 25) 3. மத நடவடிக்கைகளை நிர்வகிப்பது (பிரிவு 26) ஆகியவற்றுக்கு விரோதமானது. இன்னும் எத்தனை காலத்துக்குதான் மதம் என்ற போர்வையில் மாதர்களை இழிவு செய்யும் கொடுமையைப் பொறுத்துக்கொள்வது?
- பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி, மதுரை.
WRITE A COMMENT