Published : 15 Dec 2015 08:32 AM
Last Updated : 15 Dec 2015 08:32 AM

யாருக்காக, எதற்காக வளர்க்கிறோம்!

‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் தொடர்ந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக பல கட்டுரைகள் வந்துகொண்டிருக்கின்றன. எல்லாவற்றிலும் அரசியல் இருக்கும்போது, ஆளப்படுபவர்களாகிய நாமும் நமது குழந்தைகளும் மட்டும் ஏன் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்?

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என எவருக்கும் அரசியல் தேவையில்லை என்ற திட்டமிட்ட பிரச்சாரத்தில் ஒளிந்திருக்கும் ‘அரசியலை’ நாம் காணத் தவறி விடுகிறோம். இப்பிரச்சாரத்தின் நோக்கம் பற்றி எதுவும் அறிய முயற்சிக்காத நமது நடுத்தர வர்க்கம் தமது குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறது. யாருக்காக வளர்க்கிறோம் எதற்காக வளர்க்கிறோம் என்று எந்தக் கவலையுமில்லை.

நமது உணவு, உடை, கல்வி, வேலை, ஓய்வு நேரம் என வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் விரவிக்கிடக்கும் அரசியலை நமது பிள்ளைகளுடனான உரையாடல்களில் நாம் சொல்லத் தவறி விடுகிறோம். நாம் படித்ததை விட நமது குழந்தைகள் அதிகம் படிக்க வேண்டும் என்று கவலைப்படும் நாம் நமக்குத் தெரிந்த அரசியலை விட மேம்பட்ட - இன்னும் முற்போக்கான - சரியான அரசியலை நமது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று ஒருபோதும் நினைப்பதில்லை.

நமது பணம், நமது கருத்து, நமது உழைப்பு, நமது ஆதரவு இவற்றின் மூலம் நமக்காகவே நடக்கும் நமக்கான அரசியலை இனம்கண்டு பலப்படுத்துவோம். நாம் இனம் கண்டுகொண்டால் நமது குழந்தைகளும் நம்மைப் பின்தொடர்வார்கள். எந்தத் துறையில் செயல்பட்டாலும் தன்மானத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தங்களது ‘கேரியரை’த் தொடர்வார்கள். எனவே, சிந்திப்போம் செயல்படுவோம் நமது குழந்தைகளோடு.

- மருதம் செல்வா, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x