Published : 17 Dec 2015 10:56 AM
Last Updated : 17 Dec 2015 10:56 AM

வாசகப் பரப்பெங்கும் பாயட்டும்!

தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினையை முன்வைத்து ‘ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’ என்ற அருமையான தொடரை ‘தி இந்து’வில் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிவருவது பாராட்டுக்குரியது.

உணர்வுபூர்வமாகவும், வரலாற்றுத் தரவுகளோடும், இலக்கிய வேகத்தோடும், உரிய மேற்கோள்களோடும் ஆற்றொழுக்கு நடையில் புறப்பட்டிருக்கும் எழுத்து நதி தமிழ் வாசகப் பரப்பெங்கும் பாயட்டும்!

மார்க்சிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு, சில ஆண்டுகளுக்குமுன் தொலைந்துபோன நீர்நிலைகள், காணாமல்போன ஏரிகள் குறித்த ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சிறியதும் பெரியதுமான சுமார் 400 நீர்நிலைகள் இழக்கப்பட்டதாக அறியப்பட்டது.

பட்டுக்கோட்டை அருகே குறிச்சி எனும் சிற்றூரில் இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் நடத்திக்கொண்டிருக்கும் ஓர் எளிய பள்ளிக்கூடத்தின் மாணவர்கள், அறிவியல் ஆய்வு சோதனைக்கு அந்தப் பகுதியில் உள்ள நீராதாரங்கள் குறித்த விஷயத்தை எடுத்துக்கொண்டனர்.

பண்ணவயல் ஏரியை எப்படி மராமத்துப் பணிகள் செய்தால் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று அவர்கள் வழங்கிய அறிக்கையை, மாவட்ட நிர்வாகம் பாராட்டி, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, உடனே நடவடிக்கை எடுக்கச் சொல்லியது. அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவர் ரகுவரனுக்கும் நகல் போட்டது. 8 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்னும் மறக்க இயலாத சிலிர்க்கும் அனுபவம் அது. எதிர்காலத்தைக் காக்கும் பொறுப்பை மாணவர்கள், இளைஞர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதைச் சமூகவியலாளர்கள் சொல்வது உண்டு. விழிப்புணர்வை ஊட்டும் தொடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x