Published : 26 Dec 2015 11:18 AM
Last Updated : 26 Dec 2015 11:18 AM

யார் முதல்வர்?

நல்லகண்ணு நேர்மையானவர், ஏழைப்பங்காளர் என்பதில் துளியும் ஐயமில்லை

ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடிக்காமல் போனதற்கான காரணங்கள் என்று பலவற்றை அடுக்கலாம். இரு கம்யூனிஸ்ட் கட்சியும் வெவ்வேறு கூட்டணியில் காலங்காலமாக இடம்பெற்றது, நெருக்கடிநிலையின்போது இந்திய கம்யூனிஸ்ட் இ.காங்கிரஸை ஆதரித்தது, ஊழலைவிட மதவாதம் ஆபத்து என இரு திராவிடக் கட்சிகளை வரிந்து வரிந்து ஆதரித்தது, அதுவும் தா.பாண்டியன் அதிமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டது.

கொள்கையில் சில சமரசம். உதாரணம், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் என்பதால் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவு, ஈழப் பிரச்சினையில் மாநில உணர்வுக்கு மதிப்பளிக்காமல், பொலிட்பீரோ முடிவுக்குக் கட்டுப்படுவது போன்ற காரணங்களால் மக்களிடமிருந்து விலகியது, ஊடகங்கள், பத்திரிகைகள் ஆதரவின்மை, திராவிடக் கட்சிகளின் பணபலம், இலவசத் திட்டங்கள் ஆகியவற்றால் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெறாமல் போய்விட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, கூட்டணியை விட்டு வெளியேறி தேமுதிக, மதிமுக, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சியுடன் போட்டியிட்டிருந்தால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் கம்யூனிஸ்ட் கூட்டணிக்குக் கிடைத்து ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.

எது எப்படியிருப்பினும் உழைக்கும் மக்களுக்காகப் போராடுபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தீண்டாமைக் கொடுமையை எதிர்ப்பதில் உறுதியானவர்கள். எனது சொந்தத் தொகுதியான அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பீடித் தொழிலாளர்களுக்கு அதிக கூலி, போனஸ் வாங்கிக் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே.

எனது மாணவப் பருவத்தில் நடந்த அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தேர்தலில் நல்லகண்ணு, நல்லசிவம் (மார்க்சிஸ்ட்) ஆகியோர் தோல்வி அடைந்தபோது மிகவும் வருந்தியவர்களில் நானும் ஒருவன். இம்முறை ஊழலற்ற, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால், நிச்சயம் நடுநிலையாளர்களின் ஓட்டுகள் கிடைக்கும். நல்லகண்ணு முதல்வராக வர வாய்ப்பு உண்டு.

- இரா. இராஜா பாஸ்கர், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x